வீட்டிலிருந்து வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், வேலை செய்வதற்கான நீக்குப்போக்கான பணி ஏற்பாடுகளில் முதலாளிகளும் ஊழியர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பணியாளர்கள் இதுபோன்ற ஏற்பாடுகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அவர்களைத் தொடர்புகொள்வதில் சிரமங்கள் இருக்கக்கூடாது.
முதலாளிகள் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். நேருக்கு நேர் சந்திப்பதற்குப் பதிலாக ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டும் என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அலுவலகத்தில் வேலை செய்வோரையும் வீட்டிலிருந்து வேலை செய்வோரையும் மதிப்பிடும்போது அது நியாயமானதாக இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்று பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை சட்டமாக்க அவசரப்படக்கூடாது என்று நேற்று முன்தினம் மனிதவள அமைச்சு கூறிய தற்கு ஒருநாள் கழித்து திருவாட்டி கானின் கருத்துகள் வெளிவந்துள்ளன. இருப்பினும், வீட்டிலிருந்து வேலை செய்வதே நாளடைவில் அதிகமானோர் விரும்பும் நடைமுறையாக மாறக்கூடும்.
முதலாளிகளும் மனிதவள மேலதிகாரிகளும் எவ்வாறு நீக்குப்போக்கான பணி ஏற்பாடுகளை நியாயமான, நிலையான, பயனுள்ள வகையில் செயல்படுத்த தேவையான வளங்களை முத்தரப்புப் பங்காளிகள் வழங்கியிருக்கின்றன என்று நேற்று திருவாட்டி கான் சுட்டினார்.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற நீக்குப்போக்கான பணி ஏற்பாடுகள், பொருளியல் ரீதியாக பங்களிக்கும் அதேவேளையில் பராமரிப்பாளர்கள் வீட்டில் தங்கள் பங்கை செலுத்தவும் உதவும் என்பதையும் திருமதி கான் வலியுறுத்தினார்.
கட்டணக் கழிவுடன் கூடிய பராமரிப்புச் சேவைகள், மானியங்கள் போன்றவை முதலாளிகள் மத்தியில் நீக்குப்போக்கான பணி ஏற்பாடுகளை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது.
அத்துடன் பராமரிப்பாளர்கள் உட்பட அனைத்து சிங்கப்பூரர்களும் தங்கள் ஓய்வுக்காலத்துக்கு போதுமான சேமிப்பை உருவாக்க உதவும் நடவடிக்கைகள் போன்ற பல வழிகளில் அரசாங்கம் ஆதரவு வழங்கு கிறது என்று அமைச்சர் விளக்கி னார்.
சிங்கப்பூரில் உள்ள பெண்களின் முழுநேர வேலை வாய்ப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 65 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
ஆனால் தங்களுக்கு இருக்கும் பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக ஒரு சிறிய அளவிலான பெண் களால் பணியிடங்களில் ஓரளவா கவோ அல்லது முழுமையாகவோ பணிகளில் பங்கேற்க முடியவில்லை என்று திருவாட்டி கான் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டில், இங்கு 25 முதல் 64 வயதுக்குட்பட்ட பெண்களில் 15 விழுக்காட்டினர் ஊழியர் அணியில் சேராமல் இருப்பதற்கு குடும்பம் தொடர்பான பொறுப்புகளே முக்கிய காரணம் என்று கூறினர்.
ஆறு விழுக்காட்டினர் குடும்பம் அல்லது தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக பகுதிநேர வேலை செய்வதாகவும் கூறியுள்ளனர் என்றும் துணை அமைச்சர் கான் தெரிவித்தார்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளின் வெற்றியை உறுதி செய்தல்

