குடும்பம் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களைக் கண்டறிந்து ஆதரவளிக்க சமூக சேவை அமைப்புகளும் பிற சமூகப் பங்காளிகளுக்கும் உதவுவதற்காக மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எந்த விதமான வன்முறையையும் அனுபவிக்கும் அனைவருக்கும் ஆதரவளிக்கும் மூன்று குடும்ப வன்முறை நிபுணத்துவ நிலையங்களின் ஆற்றல்களைப் பலப்படுத்த ஆவன செய்யப்படும்.
இது தவிர, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, (MSF) குடும்ப வன்முறை நிபுணத்துவ நிலையங்களுக்கு உதவி நாடி வருவோரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வளங்கள் இருப்பதை உறுதி செய்யும் என்றும் திருவாட்டி சுன் கூறினார்.
இரண்டு குடும்ப வன்முறை நிபுணத்துவ நிலையங்களான 'கேர் கார்னர் புரோஜெக்ட் ஸ்டார்ட்', மற்றும் 'பேவ் இன்டகிரேட்டட் சர்விசஸ் ஃபோர் இன்டிவிஜுவல்' அண்ட் ஃபேமிலி புரோடெக்ஷன் ஸ்பெஷலிஸ்ட் சென்டர்' ஆகியவை அனைத்து விதமான குடும்ப வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு ஆலோசனை போன்ற விரிவான சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை ஏற்கெனவே வழங்கி வருகின்றன என்று அமைச்சர் விவரித்தார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மூன்றாவது குடும்ப வன்முறை நிபுணத்துவ நிலையமான டிரான்ஸ் சேஃப் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.
இதனால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு இந்நிலையம் ஆதரவு வழங்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித் தார்.
கல்வி நிறுவனங்கள், அடித்தள மற்றும் சமய அமைப்புகள் உட்பட பொது, தனியார் துறைகளைச் சேர்ந்த 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் கடந்த ஆண்டு குடும்ப வன்முறை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது என்று திருமதி சுன் குறிப்பிட்டார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, இன்னும் அதிகமான அமைப்புகளுடனும் இதர பங்காளிகளுடனும் தொடர்ந்து பணியாற்றும்.
ஒவ்வொரு மூன்றாவது குடும்ப வன்முறை நிபுணத்துவ நிலையத்துக்கும் 'பேவ்' அமைப்புக்கும் சிறப்புப் பயிற்சி பெற்ற நிபுணர்களை அனுப்ப, அமைச்சு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இது அடுத்த 12 முதல் 24 மாதங்களில் தொடங்கும் என்று கடந்த திங்கட்கிழமையன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அதிர்ச்சி மற்றும் மனக் கவலைகளைத் தீர்க்கவும், குற்றவாளிகளின் தவறான நடத்தையுடன் தொடர்புடைய அபாயக் காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதில் தலையிடவும், பிரச்சினையிலிருந்து விடுபட்டவர்களுக்கான பாதுகாப்புத் திட்டத்தில் ஈடுபட சமூகப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றவும் நிபுணர்கள் உதவுவார்கள்.
ஒட்டுமொத்தமாக, இது மீண்டும் மீண்டும் நடக்கும் வன்முறை அபாயத்தைக் குறைக்க உதவும் என்று அமைச்சர் சுன் கூறினார்.
குடும்ப வன்முறை அறிக்கைக்கான பணிக்குழுவின்படி, 2020 நிதியாண்டில் இதுபோன்ற சம்பவங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற நிலையங்களால் குடும்ப வன்முறை குறித்து 4,574 விசாரணைகள் இடம்பெற்றன.
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 2,906 புகார்களைவிட 57 விழுக்காடு அதிகமாகும்.
இந்த நிலையங்கள் கையாண்ட உண்மைச் சம்பவங்கள் 2020 நிதியாண்டுடன் ஒப்புநோக்க 25 விழுக் காடு அதிகரித்து 1,103 சம்பவங்கள் ஆனது.

