கொவிட்-19 தொடர்பான இரு விதிமுறைகளை மீறியதாக கெண்டக்கி ஃபிரைட் சிக்கன் (கேஎஃப்சி) நிர்வாகத்தின் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
ஃபார் ஈஸ்ட் பிளாசாவில் உள்ள கேஎஃப்சி கடையில் கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் கொவிட்-19 பரிசோதனை செய்யாமல் நான்கு வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்ததாகத் தெரியவந்தது.
சில்லறை உணவு, பான வர்த்தகத்திற்கு உரிமம் அளிக்கப்பட்ட அந்தக் கடை வாடிக்கையாளர்களிடம் கொவிட்-19 அறிகுறிகள் உள்ளனவா என்பதைச் சோதித்தறியும் நடை
முறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும் என குற்றச்சாட்டு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த நான்கு வாடிக்கை
யாளர்களும் இரண்டு இரண்டு பேர் கொண்ட குழுக்களாக இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையையும் அந்தக் கடை மேற்கொள்ளவில்லை.
இருவருக்கு மேல் சேர்ந்து உண்ண அப்போது அனுமதி இல்லை.
முகம்மது ஆரிஃபின் சாஹ்டன், ஷெஸெல் சிலாமட், நைலா முகம்மது கமால் மற்றும் முகம்மது ஹிதாயத் ரஹ்மத் என்போரே அந்த நான்கு வாடிக்கையாளர்கள்.
கேஎஃப்சி நிறுவனத்தைப் பிரதிநிதித்து ஜோனதன் லியு தியோங் சூ என்பவர் குற்றச்சாட்டு ஆவணங் களைப் பெற்றுக்கொண்டார்.
சட்ட ஆலோசனை பெற அவகாசம் வேண்டும் என்பதால் வழக்கை ஒருவாரத்திற்கு தள்ளி வைக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க ஜனவரி 21ஆம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 விதிகளை மீறு வோருக்கு ஆறு மாதம்வரையி லான சிறைத் தண்டனை, $10,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

