தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்பக் கோளாறால் தடைபட்ட 'விடிஎல்' பேருந்துப் பயணச்சீட்டு விற்பனை

1 mins read
83febc85-e0fd-43a9-91c4-b4c996e9446a
தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) சிங்கப்பூர் - ஜோகூர் பாரு இடையிலான பேருந்துப் பயணச்சீட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது பயணச்சீட்டுகளை ரத்து செய்ததாலும் தொழில்நுட்பக் கோளாறாலும் பயணச்சீட்டு விற்பனை தடைபட்டது. படம்: டிரான்ஸ்டார் டிராவல்/ஃபேஸ்புக் -

தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) சிங்கப்பூர் - ஜோகூர் பாரு இடையிலான பேருந்துப் பயணச்சீட்டுகளை வாங்க பலரும் முண்டியடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது பயணச்சீட்டுகளை ரத்து செய்ததாலும் தொழில்நுட்பக் கோளாறாலும் பயணச்சீட்டு விற்பனை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) தடைபட்டது.

'விடிஎல்' திட்டத்தன்கீழ் பிப்ரவரி 10 முதல் 28ஆம் தேதி வரைக்குமான பயணச்சீட்டுகள் விற்பனையை சிங்கப்பூரின் 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனம் 'ஷாப்பி' மெய்நிகர்க் கடை வழியாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதற்குமுன் ஒரு நேரத்தில் ஒரு நாளுக்கான பயணச்சீட்டுகளை அந்நிறுவனம் விற்றுவந்தது.

இம்முறை 19 நாள்களுக்குமான பயணச்சீட்டுகளை ஒரே நாளில் அது வெளியிட்டது.

ஆனால், விற்பனை தொடங்கியதும் சிலர் தங்களது பயணச்சீட்டுகளை ரத்து செய்ததால், பயணச்சீட்டு வாங்க ஆர்வம் காட்டிய மற்ற வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற ஷாப்பி மின்வணிகத்தளம் பயன்படுத்திய இணையவழிப் படிவமே தடங்கலுக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது.

அதிகமானோர் அதனைப் பூர்த்திசெய்து, தாக்கல் செய்ததால் அப்படிவம் அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போனது.

இதன் காரணமாக, பயணிகளைப் பற்றிய விவரங்கள் இல்லாத முன்பதிவுகள் 30 நிமிடங்களுக்குப் பின்னர் தானாகவே ரத்து செய்யப்பட்டுவிட்டன.