சிராங்கூன் நார்த், தவிஸ்டோக் நிலையங்கள், சுரங்கப்பாதைகளை 2 நிறுவனங்கள் கட்டும்
குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடத்தில் அமையக்கூடிய சிராங்கூன் நார்த், தவிஸ்டோக் எம்ஆர்டி நிலையங்களின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையம் மொத்தம் $861 மில்லியன் மதிப்புள்ள இரண்டு குத்தகைகளை வழங்கி உள்ளது.
அதையடுத்து இந்த நிலவரம் தெரியவந்து உள்ளது.
சிராங்கூன் நார்த் ரயில் நிலையத்தையும் சுரங்கப்பாதைகளையும் வடிவமைத்து கட்டுவதற்கான $454 மில்லியன் மதிப்புள்ள குத்தகையை 'ஹோக் லியான் செங் இன்ஃப்ராஸ்ட்ராக்சர்' என்ற நிறுவனம் பெற்று இருக்கிறது.
அங் மோ கியோ அவென்யூ 3 மற்றும் இயோ சூ காங் ரோடு வாகனப் போக்குவரத்துப் பாலத்தின் இரட்டை தடங்களுக்குக் கீழே சிராங்கூன் நார்த் ரயில் நிலையம் அமையும். கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் வாகனங்கள் பல கட்டங்களில் திருப்பிவிடப்படும்.
அதேவேளையில், அந்த நிலையத்திற்கான சுரங்க இணைப்புப் பாதைகள் இயோ சூ காங் ரோடு பாலத்திற்குக் கீழே கட்டப்படும்.
இதனால் இயோ சூ காங் ரோடு பாலத்தில் செல்லும் வாகனங்களுக்கு அவ்வளவாக வசதி குறைவு இருக்காது. சிராங்கூன் நார்த் ரயில் நிலையத்துடன் இணைந்த மூன்றாவது தண்டவாளப் பாதை அமைக்கப்படும்.
ரயில்களை நிறுத்திவைக்க அல்லது வேறு தடத்தில் மாறிச் செல்ல ஏதுவாக இந்த வசதி அங்கு இடம்பெற்று இருக்கும்.
தவிஸ்டோக் எம்ஆர்டி நிலையத்தையும் சுரங்கப்பாதைகளையும் வடிவமைத்து கட்டுவதற்கான $407 மில்லியன் மதிப்புள்ள குத்தகை 'சாட்டோ கோக்யோ' என்ற நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
இந்த நிலையம், அங் மோ கியோ அவென்யூ 3ல் அமைந்து இருக்கும். குடியிருப்பு, வர்த்தகக் கட்டடங்கள் அதனைச் சுற்றி நிறைந்திருக்கும்.
அங் மோ கியோ நிலையத்தை நோக்கி மேற்குப் பகுதியிலும் சிராங்கூன் நார்த் நிலையத்தை நோக்கி கிழக்குப் பகுதியிலும் சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்படும்.
அந்தப் பாதை தவிஸ்டோக் எம்ஆர்டி நிலையம் வழியாகச் செல்லும். குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடம் சிங்கப்பூரின் எட்டாவது ரயில் பாதையாக இருக்கும்.
அதன் முதல் கட்டம் 29 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்படும். அது 2030ல் பயணிகள் சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

