ஓமிக்ரான் தொற்று ஏறக்குறைய இரண்டு மடங்கு கூடியது
சிங்கப்பூரில் புதன்கிழமை புதிதாக 797 பேருக்கு கொரோனா, ஓமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளன்று 438 ஆக இருந்தது.
அவர்களில் 513 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். 284 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்தம் 882 பேருக்குத் தொற்று உறுதியானது. அவர்களில் 486 பேர் உள்ளூர் மக்கள். 396 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் புதன்கிழமை மரணமடைந்துவிட்டார். மொத்த மரண எண்ணிக்கை 839 ஆகியது. வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் 1.60 ஆகக் குறைந்தது.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 288,125. மருத்துவ மனையில் 167 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 பேர் உள்ளனர்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றுள்ளவர்களில் மொத்தம் 91 விழுக்காட்டினரும், மொத்த மக்களில் 87 விழுக்காட்டினரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர். ஏறத்தாழ 48 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அமைச்சர் ஈஸ்வரன் விளக்கம்:
ஆண்டுக்கு $1மி. மிச்சமாகும்
மவுண்ட் பிளசண்ட், மரினா சவுத் ஆகிய இரண்டு எம்ஆர்டி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வீடுகள் ஆயத்த மாகும்வரை அந்த இரு நிலையங்களும் மூடியே இருந்தால் ஆண்டுக்கு $1 மில்லியன் வரை மிச்சமாகும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார்.
தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்தின் கட்டம் 3ன் பாதையில் அந்த நிலையங்கள் அமைந்துள்ளன. அவற்றின் அருகில் இருக்கும் எஞ்சிய இதர நிலையங்களுடன் சேர்த்து அவ்விரு நிலையங்களையும் திறந்துவிடும் பட்சத்தில் அவற்றைப் பயன்படுத்துவோர் குறைவாகவே இருப்பார்கள் என்பதே இதற்கான காரணம் என்றாரவர்.
ஸ்டீவன்ஸ் முதல் கார்டன்ஸ் பை தி பே வரைப்பட்ட எஞ்சிய 11 நிலையங்களும் 2022 பிற்பகுதியில் திறக்கப்பட உள்ளன. ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங்கிற்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் அமைச்சர் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
மவுண்ட் பிளசண்ட், மரினா சவுத் ஆகிய இரண்டு நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இடம்பெறக்கூடிய மேம்பாடுகளை நிலப் போக்குவரத்து ஆணையம் அணுக்கமாகக் கண்காணித்துவரும்.
அந்த இரு நிலையங்களும் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரங்களைச் சரியான நேரத்தில் ஆணையம் வெளியிடும் என்றார் திரு ஈஸ்வரன்.
பொதுச் சேவை ஆணைய கல்வி உபகாரச் சம்பளம் பற்றி அமைச்சர்
பொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளத்தை 2019ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையில் பெற்றவர்களில் ராஃபிள்ஸ் கல்வி நிலையம், அல்லது ஹுவா சோங் கல்வி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் சராசரியாக பாதி பேர் கூட இல்லை என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
கடந்த 2012 முதல் 2018 வரை அந்தக் கல்வி உபகாரச் சம்பளத்தைப் பெற்றவர்களில் 60%க்கும் மேற்பட்டவர்கள் இந்த இரண்டு கல்வி நிலையங்களையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இந்த அளவு இப்போது குறைந்துள்ளது.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவுக்குப் புதன்கிழமை பிரதமர் சார்பில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் அமைச்சர் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார். பொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளங்களை இப்போது பரவலாக பலரும் பெறுகிறார்கள் என்று அமைச்சர் விளக்கினார்.
தொடக்கக் கல்லூரிகள், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைச் சேர்ந்தவர்கள் அந்த உதவியைப் பெறுவது அதிகமாகி இருக்கிறது. அதைப் பெற்ற பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் அண்மைய ஆண்டுகளில் அதிகம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

