சிங்கப்பூரில் செயல்படும் வர்த்தகச் சங்கங்களும் சபைகளும் தங்களுடைய மூலாதார ஆற்றல்களைப் பலப்படுத்திக்கொள்ள ஏதுவாக புதிய ஒரு செயல்திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
அந்தச் செயல்திட்டம் பரிணமிக்கின்ற புதிய போட்டித்திறன்களைப் பலப்படுத்தும். அதனால் ஊழியர்களின் தேர்ச்சிகள் மேம்படும் என்று தெரிவிக்கப்ட்டது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆகியவற்றின் ஆதரவுடன் சிங்கப்பூர் சீன வர்த்தக தொழிற்சபை அந்தப் புதிய செயல்திட்டத்தை மேற்பார்வையிடுகிறது.
30க்கும் மேற்பட்ட வர்த்தகச் சங்கங்கள், சபைகளுடன் ஏறத்தாழ ஆறு மாத காலம் பலவற்றையும் கலந்து ஆலோசித்து அதற்குப் பிறகு அந்தச் செயல்திட்டத்தை 'எர்ன்ஸ்ட் அண்ட் யாங்' நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
அந்தச் செயல்திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. வர்த்தக தொழில் துணை அமைச்சர் திருவாட்டி லோ யென் லிங் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
"கொவிட்-19 காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு உலகம் முழுவதுமே பல தொழில்துறைகளுக்குச் சவால்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
"நிறுவனங்கள் தொடர்ந்து போட்டித்திறனோடும் காலத்திற்கு ஏற்றவையாகவும் இருந்து வரும் வகையில் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றி அமைத்துக் கொண்டு வருகின்றன.
"இத்தகைய ஒரு நிலையில், வர்த்தகச் சங்கங்களும் சபைகளும் நிறுவனங்களுக்கு உதவுவதில் மிக முக்கிய பணியை ஆற்றுகின்றன," என்று திருவாட்டி லோ தனது உரையில் குறிப்பிட்டார்.
அந்த உதவியுடன் நிறுவனங்கள் தாங்கள் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளித்து புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றார் அவர்.
புதிய சூழலுக்கு ஏற்ற தேர்ச்சிகளை அடையாளம் காண சங்கங்களுக்கும் சபைகளுக்கும் உதவும் வகையில் புதிய செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நிறுவனங்கள் உருமாறி மேம்படுவதற்கு மேலும் ஆதரவு அளிக்கத் தேவையான புதிய தேர்ச்சிகளை அந்தச் செயல்திட்டத்தின் மூலம் வர்த்தகச் சபைகளும் சங்கங்களும் பெறலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
"கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து மீண்டு வரக்கூடிய மிக முக்கியமான கட்டத்தில் பொருளியல் இருக்கிறது.
"இந்த நேரத்தில் வர்த்தகச் சபைகளும் சங்கங்களும் மூன்று முக்கிய பணிகளை மேற்கொண்டு நிறுவனங்களுக்கு உதவ முடியும்," என்று திருவாட்டி லோ யோசனை தெரிவித்தார். ஆலோசனை, இணைந்து செயல்படுதல், புத்தாக்கம் ஆகியவை அந்த மூன்று துறைகள் என்று அவர் கூறினார்.
இதனிடையே, உள்ளூர் நிறுவனங்களுக்கு மேலும் சிறந்த முறையில் ஆதரவு அளிக்கும் வகையில் வர்த்தகச் சபைகளும் சங்கங்களும் மேம்படவும் தேவையான புதிய ஆற்றல்களைப் பெறவும் இந்தப் புதிய செயல்திட்டம் உதவும் என்று சிங்கப்பூர் சீன வர்த்தகச் தொழிற்சபையின் தலைவர் ரோனல்டு இங் நம்பிக்கை தெரிவித்தார்.
வர்த்தகச் சபைகள் மற்றும் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கான பயிற்சிப் படிப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் நேற்றைய நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சீன வர்த்தக தொழிற்சபைக்கும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

