தன் மனைவிக்குத் தெரியாமலேயே அவரை இன்னொருவருக்கு இரையாக்க கணவரே கூட்டுச் சதியில் ஈடுபட்டார். ஆனாலும், போதையில் ஆடை இன்றி, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த 44 வயதுப் பெண், தாம் சீரழிக்கப் படுமுன் சுயநினைவிற்குத் திரும்பினார். இதையடுத்து, அப்பெண்ணின் கணவருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்த 47 வயது ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதிக்கப் பட்டது. அப்பெண்ணின் கணவர் விரைவில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.
தடுப்பூசி போட்டுவிட்டதாகப் பொய்யாகப் பதிவுசெய்யுமாறு கூறி, லஞ்சம் தர முயற்சி
இரண்டாவது தவணை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டதாகப் பொய்யாக ஆவணத்தில் பதிவுசெய்யக் கோரி, அதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக 34 வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.
கெல்வின் டான் லி மிங் எனும் அந்த ஆடவர், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி சுவா சூ காங்கில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் பகுதிநேரமாக வேலைசெய்த தாதி ஒருவருக்கு 50 வெள்ளி தர முயன்றதாகக் கூறப்பட்டது.
ஆனால், அத்தாதி அதனை ஏற்க மறுத்துவிட்டதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது. தம்மீதான ஊழல் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட உள்ளதாக டான் நீதிமன்றத்தில் கூறினார். இவ்வழக்கு தொடர்பில் வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் பிப்ரவரி 17ஆம் தேதி இடம்பெற உள்ளது.
குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால், டானுக்கு $100,000 வரை அபராதமும் ஐந்தாண்டுகள்வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
முன்னாள் காதலியின் பிள்ளைகளிடம் அத்துமீறி நடந்ததாகக் குற்றச்சாட்டு
முன்னாள் காதலியின் பிள்ளைகளைப் பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் ரீதியாகத் தொல்லைதந்த ஆடவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்போது அந்த ஆடவரின் வயது 48. அவரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இப்போது 31 மற்றும் 29 வயதாகிறது. 2000-2005 காலகட்டத்தில், முன்னாள் காதலியின் மகள் ஏழு முதல் 13 வயதுக்குள் இருந்தபோது அவரைப் பாலியல் ரீதியாக சீரழிக்க முயன்றதாகவும் மானபங்கப்படுத்தியதாகவும் அந்த ஆடவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், 2001-2003 ஆண்டுகளில் தமது முன்னாள் காதலியின் மகனுக்கு 11 முதல் 13 வயதானபோது, அவரிடமும் அத்துமீறி நடந்துகொண்டதாக இரு குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் எதிர்நோக்குகிறார். இவ்விரு குற்றச்சாட்டுகளை மறுக்கும் அந்த ஆடவர், தன்மீதான மூன்று குற்றச்சாட்டுகளை ஒத்துக் கொண்டார். அக்குற்றச் செயல்களில் ஈடுபட்டபோது அவர் 26லிருந்து 32 வயதுக்குள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய அரும்பொருளகத்தில் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' புகைப்படக் கண்காட்சி
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் நாளை சனிக்கிழமை முதல் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' புகைப்படக் கண்காட்சி இடம் பெறுகிறது. இவ்வாண்டுக் கண்காட்சியில் பருவநிலை மாற்றம் குறித்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர், அனைத்துலகப் புகைப்பட செய்தியாளர்களின் கிட்டத்தட்ட 200 புகைப்படங்களும் காணொளிகளும் கண்காட்சியில் இடம்பெறவிருக்கின்றன. வரும் பிப்ரவரி 6ஆம் தேதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
பயணிகளுக்கான சலுகைத் திட்டங்களை மீண்டும் நீட்டித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவையை அடிக்கடி நாடும் பயணிகளுக்கான 'ஃபிரிக்குவென்ட் ஃபிளையர்' திட்டத்தின் கீழ் வரும் 'கிரிஸ்ஃபிளையர் மைல்ஸ்' காலாவதியாகும் தேதி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் காலாவதியாகும் 'கிரிஸ்ஃபிளையர் மைல்ஸ்', தானாகவே மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப் படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. அதாவது, இம்மாதத்தில் காலாவதியாகும் 'கிரிஸ்ஃபிளையர் மைல்ஸ்', வரும் ஜூலை மாதம்வரை செல்லத்தக்கதாக நீட்டிக்கப்படும். அதேபோல, இவ்வாண்டு ஜூலையில் காலாவதியாகும் 'கிரிஸ்ஃபிளையர் மைல்ஸ்' புள்ளிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதுபோல, இவ்வாண்டில் காலாவதியாக இருக்கும் 'பிபிஎஸ் ரிவார்ட்ஸ்', 'கிரிஸ்ஃபிளையர் மைல்ஸ்டோன் ரிவார்ட்ஸ்' ஆகியவற்றின் காலாவதித் தேதி டிசம்பர் 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப்படும். அத்துடன், இவ்வாண்டு மார்ச் முதல் 2023 பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில் காலாவதியாகும் 'பிபிஎஸ் கிளப்', 'கிரிஸ்ஃபிளையர் எலீட்' உறுப்பிய நிலை, தானாகவே மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்படும்.

