சிங்கப்பூரில் தற்போதிருக்கும் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளின்படி அனைத்து 2,200 காப்பிக் கடைகளும் சிற்றுண்டி சாலைகளும் ஐந்து பேர் வரை ஒன்றுகூடி உணவருந்த அனுமதிக்கலாம். உணவருந்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
எனினும் 112 காப்பிக் கடைகள், சிற்றுண்டி சாலைகள் மட்டுமே ஐந்து பேர் வரை ஒன்றாக உணவருந்த அனுமதிக்கின்றன. வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவு தங்களுக்குப் பெரும் சவாலாய் இருப்பதாக காப்பிக் கடை சங்கங்களும் கடைக்காரர்களும் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்த மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வெள்ளி ஆகலாம்.
தேசிய சுற்றுப்புற அமைப்பின்கீழ் உள்ள அனைத்து 110 உணவங்காடி நிலையங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேர் வரை ஒன்றுகூடி உணவருந்தலாம். இந்த உணவங்காடி நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், சில பகுதிகளைப் பொதுமக்களுக்கு மூடிவைப்பது போன்ற நடவடிக்கைகளிலும் காப்பிக் கடைகள் உள்ளிட்டவை சவால்களை எதிர்நோக்குகின்றன. ஒரு காப்பிக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் வர சில நுழைவாயில்கள் இருக்கவேண்டும். அவற்றில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதி உண்டு என்பதைத் தெரிவிக்க குறிப்புகளையும் வைக்கவேண்டும். தாங்கள் எதிர்நோக்கும் சவால்களால் காப்பிக் கடைகள், சிற்றுண்டி சாலைகள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளைத் தளர்த்தாமல் இருக்கலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு சொன்னது. கட்டுப்பாடுகளை எவ்வாறு செயல்படுத்துவது போன்ற ஆலோசனைகளை வழங்கி காப்பிக் கடைகள், சிற்றுண்டி சாலைகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து உதவவிருப்பதாகவும் அது கூறியது.

