வேளாண் தொழில்நுட்பத் துறைக்கு பணியிடைக்கால மாற்றம் செய்ய ஊழியர்களுக்கு உதவ புதிய வாழ்க்கைத் தொழில் மாற்றத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஈராண்டுகளில் சுமார் 100 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவை திட்டத்தை நடத்துகின்றன. நீடித்த நிலைத்தன்மை அம்சங்களை சிங்கப்பூர் பின்பற்றிவரும் வேளையில் 'கிரீன் இக்கோனமி' எனும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளியலின் மூலம் ஊழியர்கள் பலனடையவேண்டும். அதற்காக அவர்களின் திறன்களை வளர்க்க எடுக்கப்படும் கூடுதல் முயற்சிகளில் இந்த ஏற்பாடு அடங்கும்.
சிங்கப்பூர், 2030ஆம் அண்டுக்குள் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தில் 30 விழுக்காட்டைத் தானே உற்பத்தி செய்யும் இலக்கைக் கொண்டுள்ளது.
வேளாண் தொழில்நுட்பத் துறையில் தற்போது சுமார் 2,000 ஊழியர்கள் இருக்கின்றனர் என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 4,700 மறுவடிவமைக்கப்பட்ட, புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"புதிய வேலைகளில் சில... பயிர் நிபுணர்கள், உணவு உற்பத்தி வல்லுநர்கள், பண்ணை நிர்வாகிகள் ஆகியவை. இந்த வேலைகளைச் செய்ய விரும்புவோருக்கு அறிவியல், தகவல், தொடர்பு தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்றவற்றில் திறன்கள் இருக்கவேண்டும்," என்று மனிதவள அமைச்சருமான திரு டான் கூறினார்.
ஈராண்டுகளில் சுமார் 100 ஊழியர்களுக்குப் பலனளிக்கவுள்ள இத்திட்டம், நல்ல வரவேற்பைப் பெற்றால் விரிவுபடுத்தப்படலாம் என்றும் திரு டான் குறிப்பிட்டார்.
தனது துறைக்குப் பயன்படக்கூடிய திறன்களைக் கொண்ட ஊழியர்களுக்குப் பணியிடைக் காலத்தில் பயிற்சியளித்து தங்களின் மனிதவளத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள வாழ்க்கைத் தொழில் மாற்றத் திட்டம் கைகொடுத்து வருகிறது.

