பொருள்களை மறுபயனீடு செய்யும் முயற்சிகளை மேம்படுத்துவதற்குப் பொதுமக்களை ஊக்குவிக்க தேசிய சுற்றுப்புற அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்பில் இவ்வாண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மறுபயனீட்டுத் தொட்டி வழங்கப்படும்.
குப்பை அள்ளுபவர்களுடன் இணைந்து தேசிய சுற்றுப்புற அமைப்பு இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது. மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களை சேகரித்து அவற்றைத் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மறுபயனீட்டுத் தொட்டிகளில் வீச இந்த நடவடிக்கை சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் எனத் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் கூறினார்.
2020ஆம் ஆண்டின் தேசிய மறுபயனீட்டு புள்ளி விவரங்களின்படி 13 விழுக்காட்டினர் மட்டுமே வீடுகளில் மறுபயனீடு செய்வதற்கான முயற்சிகளை எடுத்தனர். இந்த விகிதம், 10 ஆண்டுகளாகப் பதிவானதில் ஆகக் குறைவு.
எனினும், சென்ற ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் ஐந்தில் மூன்று சிங்கப்பூர் குடும்பங்கள் மறுபயனீட்டு நடவடிக்கைகளை எடுப்பது தெரிய வந்தது.
ஒரு குடும்பத்தின் மொத்த குப்பையின் அளவில் எவ்வளவு மறுபயனீடு செய்யப்படுகிறது என்பதைக் கொண்டு இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. 'சஸ்டெய்னபல் சிங்கப்பூர் புளூப்பிரின்ட்' எனப்படும் சிங்கப்பூருக்கான நீடித்த நிலைத்தன்மை நகல் திட்டத்தின்படி 2030ஆம் ஆண்டுக்குள் வீடுகளில் மறுபயனீடு செய்வதை 30 விழுக்காட்டுக்கு உயர்த்துவது இலக்கு.
பொருள்கள் மாசுப்படுவதே, வீடுகளுக்கான மறுபயனீட்டு விகிதம் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம். மறுபயனீட்டுத் தொட்டிகளில் வைக்கப்படுபவற்றில் சுமார் 40 விழுக்காட்டுப் பொருள்கள் மறுபயனீடு செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடையே பல காலமாக இருந்து வந்துள்ள சில தவறான கருத்துகள் இன்னமும் போகவில்லை. உதாரணமாக, ஸ்டைரஃபோம் உள்ளிட்டவற்றை மறுபயனீடு செய்யலாம் என்று சிங்கப்பூரர்களில் பாதி பேர் இன்னமும் தவறாகக் கருதுகின்றனர்.