சிங்கப்பூரில் நுரையீரல்களில் ரத்தக் கட்டிகள் உள்ள நோயாளிகளால் இனி கிட்டத்தட்ட அபாயம் அறவே இல்லாத சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் 98 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது.
நுரையீரல்களில் ரத்தக் கட்டிகள் உருவாவதற்குப் பெயர் 'பல்மோனரி எம்போலிசம்'. கவலைக்கிடமாக இருக்கும் கொவிட்-19 நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுகிறது.
இந்நிலை எழும்போது நோயாளிகளின் நுரையீரல்களில் உள்ள ரத்தக் குழாய் ஒன்றில் கட்டிகள் உருவாகும்.
இதனால் நுரையீரல்களுக்கு ரத்தம் போவது தடைபடும், போதுமான உயிர்வாயுவும் செல்லாது. இதனைத் தொடர்ந்து நோயாளியின் உடலில் உயிர்வாயுவின் அளவு குறையும்.மேலும், நுரையீரல் ரத்தக் குழாயில் ஏற்படும் இடையூறைச் சரிசெய்ய இதயம் கூடுதல் வேகத்தில் செயல்படும்போது மாரடைப்பு ஏற்படலாம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண 'பெர்ட்' எனப்படும் நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு செயற்குழு, அபாயமற்ற இரண்டு சிகிச்சை முறைகளை அறிமுகம் செய்துள்ளது. இக்குழுவில் பல்வேறு திறன்களில் கைதேர்ந்த மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
'அல்ட்ராசவுண்ட்' முறை வாயிலாக ரத்தக் கட்டியை உடைப்பது இப்பிரச்சினைக்கான புதிய தீர்வுகளில் ஒன்று. மற்றொன்று, ரத்தக் கட்டியை உறிஞ்சி எடுப்பது.
நுரையீரல்களில் உருவான ரத்தக் கட்டிகளை உறிஞ்சி எடுக்கும் முறையை ஆசிய கண்டத்தில் பின்பற்றியுள்ள முதல் குழு என்ற பெருமை 'பெர்ட்'டைச் சேரும். தென்கிழக்காசியாவில் 'அல்ட்ராசவுண்ட்' முறை வாயிலாக ரத்தக் கட்டிகளை உடைக்கும் முதல் குழுவும் இதுவே.

