ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்க கூடுதல் ஆதரவு வழங்கப்படுவது குறித்து இவ்வாண்டில் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்று வர்த்தகங்கள் எதிர்பார்க்கின்றன.
வர்த்தக உருமாற்றம் தொடர்பாகவும் உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வர்த்தகர்கள் விரும்பு கின்றனர். இவ்வாண்டில் வர்த்தகம் மேம்படும் என்று வர்த்தகர்களிடையே நம்பிக்கை உள்ளது.
இருப்பினும், செலவு அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறை ஆகியவை தொடர்பான கவலை தொடர்கிறது. வரவுசெலவுத் திட்டத்துக்கு முன்பான வட்ட மேசைக் கலந்துரையாடலில் இந்த விவகாரங்கள் முன்வைக்கப்பட்டன.
கலந்துரையாடலின்போது மீட்சி, வளர்ச்சியில் மீண்டும்
கவனம் செலுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
மின்னிலக்க உருமாற்றம், நீடித்த நிலைத்தன்மை, திறன் மேம்பாடு போன்ற முக்கியமான விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்.
"எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய, புதிய வாய்ப்பு
களைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய கூடுதல் துடிப்புமிக்க, கூடுதல் மீள்திறன்மிக்க பொருளியலை நாம் உருவாக்க வேண்டும்," என்று நிதி, வர்த்தக, தொழிலுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு லியாங் எங் ஹுவா தெரிவித்தார்.
தொழில்நுட்பத் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் மின்னிலக்க எதிர்காலத்துடன் பழகிக்கொள்ள மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்று மனிதவள
நிபுணர்கள் கழகத்தின் தலைமை நிர்வாகி மயாங்க் பாரேக் கூறினார்.

