தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தைப் பொங்கலை சிறந்த முறையில் வரவேற்றனர் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள்.
தீவு முழுவதும் கோவில்கள், கடைகள், இல்லங்கள் என எட்டுத்திக்கும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 கிருமிப் பரவல் ஏற்படுத்திய சிரமங்கள் மறைய வேண்டும் என்றும் நல்ல காலம் பிறக்கவேண்டும் என்றும் வேண்டி பலர் கோவில்களை நாடி இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
குதூகலம் பொங்கியது
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலுக்கு வந்திருந்த 36 வயது குணசேகரனுக்கும் சித்ராவுக்கும் இது கரும்புபோல தித்திக்கும் நம்பிக்கைப் பொங்கல் திருநாள்.
இந்த தம்பதிக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகின்றன.
ஆனால் குடும்பமாக ஒரே இடத்தில் சேர்ந்து கொண்டாடுவது இது இரண்டாவது முறை மட்டுமே என்றார்கள் அவர்கள். வேலை இவர்களை வெவ்வேறு இடங்களில் அலைக்கழித்ததே அதற்குக் காரணம். குடும்பத்தில் புதிய வரவை எதிர்பார்ப்பதால் அவர்களுக்கும் அவர்களின் 5 வயது மகள் விக்னஸ்ரீக்கும் கூடுதல் மகிழ்ச்சி.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில், பக்தர்களும் ஆலயத்தாரும் பொங்கல் பானை வைத்து வழிபட்டனர். காலை ஏழு மணி அளவில் பொங்கல் வைக்கும் சடங்கு தொடங்கியது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை முதலே ஆலயத்தில் கூட்டம் நிறைந்திருந்தது.
பொங்கலுக்காகவே இவ்வாண்டு வேலையிலிருந்து விடுப்பு எடுத்து கோவிலுக்கு வந்ததாக பக்தர்கள் சிலர் தமிழ் முரசிடம் கூறினர். கட்டுப்பாடுகளிலும் சுணக்கத்திலும் ஈராண்டுகள் ஓடிவிட்டன. இனி வரும் காலம் வளம் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று வேண்டி வழிபட்டதாக பக்தர்கள் சிலர் குறிப்பிட்டனர்.
புது நம்பிக்கை பொங்கியது
கடல்கடந்து இருக்கும் தங்கள் சொந்தபந்தங்களுடன் கூடியவிரைவில் இணைவோம் என்ற நம்பிக்கையுடன் பொங்கலை எந்தவொரு தொய்வுமின்றி சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் கொண்டாடினர்.
"மலேசியாவில் பொங்கல் தினம் பொது விடுமுறையாக இருப்பதால் ஒவ்வோர் ஆண்டும் அங்கு சென்று பொங்கல் கொண்டாடுவது வழக்கம். ஆனால், கொவிட்-19 சூழலில் மலேசியாவில் உள்ள உறவுகளைப் பார்த்தே இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எங்களது திருமணம் நடக்கவிருப்பதால் அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இதனால் எங்களுக்கு இந்தப் பொங்கல் இனிய பொங்கலே," என்றார் லிட்டில் இந்தியா வட்டரத்துக்கு வருங்கால மனைவி ஷியாமளாவுடன் வந்திருந்த செர்ட்டிஸ் சிஸ்கோ காவல் அதிகாரி தினேஷ், 30.
இனிக்கும் பொங்கலைக் குடும்பத்துடன் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் தித்திப்பு. அந்த வாய்ப்பு இல்லையென்றாலும், நண்பர்களுடன் பொங்கலைக் கொண்டாடிய மனநிறைவு பலருக்கு.
"எப்போதுதான் மலேசியாவுக்குப் போவோம் என்று ஏக்கமாக உள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனே மலேசியாவுக்குச் சென்றுவிடுவோம். குடும்பத்துடன் இங்கிருந்தாலும் மலேசியாவில் பொங்கல் விழா மிக விமரிசையாக இருக்கும். நண்பர்களுடன் கோயிலுக்கு இன்று வந்தது நிறைவாக உள்ளது," என்று லிட்டில் இந்தியாவுக்கு தமது நண்பர்களுடன் வந்திருந்த வினி கூறினார்.
தமிழ்நாட்டில் பொங்கல் என்றால் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். குறிப்பாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும். அதைப் பார்க்கமுடியாத சோகம் சில இந்திய வெளிநாட்டு ஊழியர்களுக்கு இருந்தது.
"பொங்கலுக்காக ஊருக்குச் சென்று ஜல்லிக்கட்டு ஆட முடியாமல் போனதால் வருத்தமாக உள்ளது. ஊரில் இருக்கும் என் அண்ணனைப் பார்க்க முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம். என் தம்பியுடன் கோயிலுக்கு வரமுடிந்தது எனக்கு ஆறுதலை அளிக்கிறது. பிறந்துள்ள தை மாதம் பிரச்சினைகளுக்கு விடியலாக இருக்கட்டும்," என்று நம்பிக்கை தெரிவித்தார் வெளிநாட்டு ஊழியர் அழகேசன் ராம்குமார்.
"சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு பொங்கல் சிறப்பாக உள்ளது. லிட்டில் இந்தியா மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது தங்கை இவ்வாண்டு பட்டப்படிப்பை முடிக்கவிருக்கிறார். அவரது திருமணம் கூடிய விரைவில் நடக்கவுள்ளது. அந்தத் தருணத்தில் என் குடும்பத்துடன் இருப்பேன் என நம்புகிறேன்," என்று வெளிநாட்டு ஊழியர் ராஜேந்திரன் பகிர்ந்துகொண்டார்.
கலைவண்ணமும் பொங்கியது
பொங்கல் திருவிழாவிற்கு இரு 'என்பிஎஸ் இண்டர்நேஷனல்' பள்ளி மாணவிகளின் கைவண்ணமும் கலைவண்ணமும் கூடுதல் சிறப்பைச் சேர்த்தது.
பொங்கல் திருநாளின் பண்பாட்டுக் கூறுகளை மேலும் ஆழமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்துள்ளதாக இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.
கண்ணுக்கும் சிந்தைக்கும் விருந்தாய் அமைந்த இவர்களின் ஓவியங்களில் பொதிந்துள்ள பல கலை நுணுக்கங்களை வந்தவர் பார்த்து ரசித்தனர்.
"தமிழ் ஓவியர் கே. மாதவன் அவர்களின் நீர் வண்ண பாணியைப் பின்பற்றி என் ஓவியத்தைத் தீட்டி இருக்கிறேன்," என்றார் மாணவி மாளவிகா.
மூன்றாண்டுகளாக ஓவியப் பாடம் பயிலும் மாளவிகா, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஓர் ஓவியராகத் திகழ விரும்புகிறார்.
"சமூக மன்றங்கள் நடத்தும் பொங்கல் நிகழ்ச்சிகளின் மூலம், பொங்கல் கொண்டாடும் நண்பர்களின் மூலம் நான் பொங்கல் விழாவைப் பற்றி அறிந்துகொண்டேன்.
"பொங்கல் வைப்பதும் கூட்டு வழிபாடு செய்வதும் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துகின்றன. பொங்கல் கொண்டாட்டங்களில் என்னை மிகவும் கவர்ந்த அம்சங்கள் இவை. அதை என் ஓவியமும் வெளிப்படுத்தும் வகையில் அமைத்துள்ளேன்," என்றார் மாணவி நந்தனா ராஜேஷ்.
தான் வரைந்த தமிழ்ப் பெண்ணின் சேலையில் புல் தரை விரிந்திருப்பது போலக் காட்டியிருப்பது தன் ஓவியத்தின் சிறப்பம்சம் என்றும் அவர் கூறினார். நான்கு வயதிலிருந்தே பெற்றோரின் ஊக்குவிப்புடன் ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டவர் நந்தனா.
நேற்றைய நிகழ்ச்சிக்கு முன்னதாக இணையம் வழியாகத் தாங்கள் ஈடுபட்டிருந்த விரிவான ஆராய்ச்சி, பொங்கலை முன்னிட்டு மற்றவர் முன்னிலையில் ஓவியம் படைத்தல் இரண்டுமே தங்களுக்குப் புதுவித அனுபவமாக அமைந்தது என்று வளர்ந்துவரும் இந்த இளம் ஓவியர்கள் பகிர்ந்துகொண்டனர்.
செய்தி: கி. ஜனார்த்தனன், விஷ்ணு வர்தினி,
சக்தி மேகனா
படங்கள்: திமத்தி டேவிட், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

