மோசடியில் ஈடுபட்டதன் சந்தேகத்தில் 242 பேரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 600 மோசடிச் சம்பவங்களில் $7.2 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை பறிபோய் இருப்பதன் தொடர்பில் 149 ஆண்களும் 93 பெண்களும் விசாரணையில் உதவி வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஆக இளையவரின் வயது 15 என்றும் ஆக வயதானவரின் வயது 75 என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட பல்வேறு அதிரடிச் சோதனைகளில் இந்தச் சந்தேக நபர்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இணையக் காதல் மோசடிகள், இணைய வர்த்தக மோசடிகள், வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் போன்றவை குறித்து இந்த நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
அண்மையில் ஓசிபிசி வங்கி பெயரிலான மோசடியில் குறைந்தது 469 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குறைந்தபட்சம் $8.5 மில்லியனை இழந்ததாகவும் அறியப்படுகிறது.
வங்கியிலிருந்து வந்தது போன்ற ஒரு குறுஞ்செய்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்களின் வங்கிக் கணக்கு தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய குறுஞ்செய்தியில் காணப்படும் ஓர் இணைப்புடன் தொடர்புகொள்ளும்படியும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இருப்பினும், அந்த இணைப்பின் வழி போலி வங்கி இணையத்தளத்திற்குச் சென்றவர்கள், தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான ரகசியத் தகவல்களை அங்கு பதிவிட்டு மோசடிக்கு ஆளாகினர்.
விசாரிக்கப்படும் நபர்களுக்கும் இக்குறிப்பிட்ட ஓசிபிசி மோசடிச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெளிவில்லை.
மோசடியில் ஈடுபடுவோருக்கு பத்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். பண மோசடி தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அல்லது $500,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

