மாரிஸ் ஸ்டெல்லா உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே கறுப்பு 'மெர்செடிஸ்' வாகனம் ஒன்று நேற்று முன்தினம் தீப்பிடித்துக்கொண்டது. இதையடுத்து 'ஜிஎல்பி 200 எஸ்யுவி' ரகமான அந்த வாகனம் தீப்பற்றி எரிந்தது, எப்போதாவது நிகழக்கூடிய ஒன்றே என்று 'மெர்செடிஸ் பென்ஸ் சிங்கப்பூர்' நிறுவனத்தை நிர்வகிக்கும் 'டைம்லர் சவுத் ஈஸ்ட் ஏஷியா' தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன் டீசல் எண்ணெயில் இயங்கும் மெர்செடிஸ் வாகனங்கள் அனைத்துலக அளவில் மீட்கப்பட்டதற்கும் இந்த வாகனத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் மீட்கப்பட்ட வாகனங்களில் 'ஜிஎல்பி' ரகம் இடம்பெறவில்லை என்றும் அது குறிப்பிட்டது.
தீச்சம்பவம் குறித்துத் தாங்கள் அறிந்திருப்பதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியத் தாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் பார்ட்லி ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்தின் வெளியே வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
தொடக்கநிலை ஒன்றில் படிக்கும் தம் மகனை வாகனத்தின் மூலம் பள்ளிக்குள் கொண்டு செல்லக் காத்திருந்த திருவாட்டி குவெக், இருவருக்கும் ஏதோ கருகிய வாடை வந்ததாகக் கூறினார். உடனே வாகனத்தை விட்டு வெளியேறிவிடுவோம் என்று மகன் கூறியதை அடுத்து இருவரும் வாகனத்திலிருந்து இறங்கிவிட்டனர்.
சில நிமிடங்களில் வாகனம் தீப்பிடித்துக்கொண்டது. எரிந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்து சில வெடிப்புகளும் ஒலித்தன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சிறிது நேரத்தில் வந்துவிட்டனர். நெருப்பையும் அணைத்துவிட்டனர். நெருப்பை அணைக்க முயற்சி செய்த பள்ளிப் பாதுகாவல் அதிகாரி திரு சுவானி சுரானிக்குப் பாதுகாவல் ஊழியர்கள் தொழிற்சங்கம் அதன் பாராட்டை நேற்று தெரிவித்தது.

