காமன்வெல்த்தில் கத்திக்குத்து; 9 மணிநேரத்தில் பிடிபட்ட சந்தேக நபர்கள்

1 mins read
00c9df3e-86bf-4978-ac82-5b392b6aa6b1
காமன்வெல்த் வட்டாரத்தில்  வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) காலை கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நடந்தது. சந்தேக நபர்கள் இருவரைக் காவல்துறையினர் 9 மணிநேரத்தில் பிடித்தனர்.   -

காமன்வெல்த் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) காலை ஒரு கத்திக்குத்து.

அந்தச் சம்பவத்தில் தொடர்பிருந்தாக நம்பப்படும் இரண்டு ஆடவர்கள் ஒன்பது மணிநேரத்துக்குள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவருக்கு வயது 26, இன்னொருவருக்கு வயது 28.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இடது கையில் வெட்டுக் காயமும் முதுகில் கத்திக்குத்தும் ஏற்பட்டது.

அவர் விழித்திருக்கும் நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர், அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது சந்தேக நபர்கள் இருவரும் பின்னாலிருந்து அவரைத் தாக்கியதாக சிங்கப்பூர் போலிஸ் படை கூறியது.

இருவரும் பிறகு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

"இது திட்டமிட்ட தாக்குதல் என்று நம்பப்படுவதாக முதற்கட்ட விசாரணை காட்டுகிறது," என்று காவல்துறையினர் கூறினர்.

விசாரணை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் புளோக் 413ல் கத்திக் கத்து நடந்ததாக வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

கிளமெண்டி போலிஸ் பிரிவு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

விரிவான விசாரணை நடத்தியும் போலிசார், கண்காணிப்புக் கேமராக்களிடமிருந்து கிடைத்த படங்களை வைத்தும் ஒன்பது மணிநேரத்தில் சந்தேக நபர்களின் அடையாளங்களைக் கண்டுபிடித்தனர்.

பொதுவான ஒரு காரணத்துக்காக ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டும் என்றே காயம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது சனிக்கிழமை (ஜனவரி 15) அன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.