முரசொலி
ஒவ்வொரு நாடும் அரசாங்கமும் வருவாய்க்கு ஏற்ப செலவிட லேண்டும். வருவாய் பெருக வழி காண வேண்டும். அந்த வழி உலக முதலீடுகளைக் கவர்வதாக இருக்க வேண்டும்; நாட்டின் போட்டித்திறனைக் கூட்டுவதாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக நிறுவனங்களும் மக்களும் அதனால் பெரிதும் பாதிக்கப்படக்கூடாது.
விரும்பிய பலனைத் தரக்கூடிய அத்தகைய ஓர் ஏற்பாட்டை நடப்பில் வைத்து இருந்து தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டுமானால் விவேகமான முடிவுகள் ஒரு நாட்டுக்கு முக்கியமானவை.
அதுவும் சிங்கப்பூரைப் போன்ற இயற்கை வளம் இல்லாத, உலகப் பொருளியலுடன் அணுக்க தொடர்பு கொண்டு ஏற்றுமதியை அதிகம் சார்ந்துள்ள ஒரு நாட்டுக்கு அத்தகைய ஓர் ஏற்பாடு மிகமிக அவசியமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசுக்கான வருடாந்திர நிரந்தர வருவாயில் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமான ஓர் அங்கம். இதில் நிறுவனங்கள் செலுத்தும் வரியும் தனிநபர் வரியும் நேரடி வரிகள்.
நிறுவனங்களுக்கு அதிக வரி விதித்தால் அவற்றின் போட்டித்திறனுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும். தனிநபர் வரி கூடினால் அவர்கள் செலவிடும் தொகை குறையும். ஆகையால் இவற்றைக் கூடுமானவரை குறைத்து வைத்திருக்கவேண்டும்.
அதே வேளையில், அரசுக்கு வருவாய் கூடவேண்டும். இதற்காகத்தான் பொருள், சேவை வரி என்ற ஜிஎஸ்டி வரி, மறைமுக வரியாக 1994ல் நடப்புக்கு வந்தது. முதலில் 3% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. பிறகு 2003ல் அந்த வரி 4% ஆகியது. 2004ல் 5%க்கு கூட்டப்பட்டது. கடைசியாக 2007ல் அந்த வரி 7% ஆகியது. அது முதல் அந்த வரி அப்படியே இருந்து வருகிறது. உலகிலேயே. ஆசியாவிலேயே ஆகக் குறைவாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று.
ஜிஎஸ்டி வரி காரணமாக மக்களுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் சுமையைக் குறைக்க ஒவ்வொரு முறையும் பல வழிகளில் நிவாரண உதவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிறுவன வரி, தனிநபர் வரி கணிசமாகக் குறைக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரியை வரும் 2025க்கு முன்னதாக 7%லிருந்து 9%ஆக உயர்த்த ஏற்கெனவே திட்டம் உள்ளது. அந்த வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருந்தும் பொருளியல் சூழலுக்கு ஏற்ப, அண்மைய கொரோனா தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு நிலவரங்களையும் கருத்தில்கொண்டு பார்க்கையில் அந்த வரியை உயர்த்த வேண்டிய தருணம் இப்போது வந்துள்ளதாகவே தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் புதிய வரவு செலவுத் திட்டம் தாக்கலாகிறது. அதில் ஜிஎஸ்டி வரி பற்றிய முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். அதற்குப் பிறகுதான் எப்போது ஜிஎஸ்டி வரி உயரும் என்பது தெரியவரும்.
சிங்கப்பூரில் பணவீக்கம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி உயர்வு இடம்பெற்றால் அதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று நிலவும் கவலை புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான்.
ஒட்டுமொத்த பணவீக்கம் ஒன்பது ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு கடந்த நவம்பரில் 3.8% ஆக இருந்தது. இது, இந்த ஆண்டில் இன்னும் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல மூலாதார பணவீக்கம் இப்போதைய 1.6%ல் இருந்து அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு.
இது ஒருபுறம் இருக்கட்டும். கடந்த இரண்டாண்டு காலத்தில் அரசாங்கத்திற்கு $75 பில்லியனுக்கும் மேற்பட்ட அளவுக்கு ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது.
சேமிப்பில் இருந்து $53.7 பில்லியன் பணத்தை அரசாங்கம் எடுத்து இருக்கிறது. கொவிட்-19 தொற்று இன்னமும் முடிந்தபாடில்லை.
இந்தச் சூழ்நிலையில், மேலும் கணிசமான பணத்தைச் செலவிட வேண்டிய தேவை, நீண்டகாலப் போக்கில் சுகாதாரம், சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகளில் பெரும் பணத்தைச் செலவிடுவதற்கான அவசியம் இருக்கும்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் அந்தக் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வருவாயைப் பெருக்க அரசாங்கம் வழி காண வேண்டும். இதற்கு ஜிஎஸ்டி வரியைத் தவிர்த்து இப்போதைக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. வருமான வரியை உயர்த்தினால் போட்டித்திறன் பாதிக்கப்பட்டுவிடும்.
தனிநபர் வருமான வரியைச் செலுத்துவோர் அளவும் மக்கள்தொகையில் 30 விழுக்காடு அளவுக்குத்தான் இருக்கிறது. சொத்து வரி, கார்பன் வரி போன்றவற்றை அதிகரித்தாலும் கூட அவற்றால் கணிசமான அளவுக்கு அரசுக்கு வருவாய் வர வாய்ப்பில்லை. இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் பணவீக்க நெருக்கடி கொஞ்சம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும்கூட அத்தகைய ஒரு நிலை நிச்சயமாக ஏற்படும் என்பதை உறுதி செய்யக்கூடிய அளவுக்கு நிலவரங்கள் இப்போது உறுதியாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில் ஜிஎஸ்டி வரியை உயர்த்திதான் ஆக வேண்டும் என்ற ஒரு நெருக்கடிக்கு அரசாங்கம் ஆளாகி இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக மக்களுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் சுமையைச் சமாளிக்க பெரும்பாலான குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஏற்கெனவே $6 பில்லியன் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் ஐந்தாண்டுக்கு நடப்பில் இருக்கிறது.
குறைந்த வருமான குடும்பங்களைப் பொறுத்தவரை இந்த உதவி 10 ஆண்டு காலத்திற்குத் தொடரும். ஜிஎஸ்டி வரி உயரும்பட்சத்தில் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டமும் அதற்கேற்ப மேம்படுத்தப்பட்டு, வரி உயர்வு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சுமை குறையும் என்பதில் ஐயமில்லை.
இவற்றோடு இருந்துவிடாமல், வருங்காலத்தில் விலைகள் கூடும்போது அதன் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிக்குப் பலதரப்பட்ட வழிகளை கண்டு இருப்புகளை அரசாங்கம் பலப்படுத்தி வரவேண்டும்.
நாணய பரிவர்த்தனைக் கொள்கைகளைப் பொருத்தமாக திருத்தி அமைக்க வேண்டும். எதிர்பாராத விதமாக விலைகள் கூடும்போது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்கும் வகையில் குடும்பங்களுக்குக் கூடுதல் உதவிகளை வழங்குவது பற்றியும் அரசு பரிசீலிக்கலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இப்போதைக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தாலும் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கையில், ஜிஎஸ்டி வரி உயர்வு என்பது, தாமதப்படுத்தக்கூடாத, தாமதப்படுத்த முடியாத ஒன்றாகவே இருக்கிறது என்பதே விவேகமானது.

