செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
bbd91832-e51b-4ba8-8bcd-1689b2427af2
-

புதிதாக 832 பேருக்கு

ஓமிக்ரான் கிருமித்தொற்று

சிங்­கப்­பூ­ரில் வெள்ளிக்கிழமை புதி­தாக 832 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்டதாக­ சுகாதார அமைச்சு கூறி­யது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளன்று 549 ஆக இருந்தது.

அவர்­களில் 543 பேர் உள்ளூரைச் சேர்ந்­த­வர்­கள். 289 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். மொத்தம் 945 பேருக்குத் தொற்று உறுதியானது. அவர்களில் 582 பேர் உள்ளூர் மக்கள். 363 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். புதிதாக ஒருவர் மரணமடைந்துவிட்டார்.

மொத்த மரண எண்ணிக்கை 840 ஆகியது. வாராந்­திர கொவிட்-19 தொற்று விகி­தம் 1.38 ஆகக் குறைந்தது.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை புதன்கிழமை நில­வரப்­படி 290,030. மருத்துவ மனையில் 185 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 பேர் உள்ளனர்.

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றுள்ளவர்களில் மொத்தம் 91 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர். ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

சீனப் புத்தாண்டு: கூட்டத்தைக் குறைக்க அமலாக்க முயற்சிகள்

சீனப் புத்தாண்டையொட்டி சைனாடவுன் பகுதிக்குச் செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டத்தைக் குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைககள் நடப்புக்கு வரும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மீறப்படாமல் மக்கள் நடந்துகொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் அமலாக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

சீனப் புத்தாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய மூன்று வார முடிவு நாட்களில் அதிக அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காமன்வெல்த்தில் கத்தியால் தாக்குதல்: இரண்டு பேர் கைது

காமன்வெல்த் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஒன்பது மணி நேரத்திற்குள் 26 மற்றும் 28 வயதுள்ள இரண்டு சந்தேகப்பேர்வழிகள் கைதாயினர்.

காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டில் இருக்கும் புளோக் 413ல் வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.30 மணிக்கு ஆடவர் ஒருவர் கார் பேட்டை ஒன்றை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது இரண்டு பேர் அவரை அணுகினர். அந்த இருவரில் ஒருவர் கத்தியால் அந்த ஆடவரை பின்புறம் இருந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. பிறகு சந்தேக நபர்கள் இருவரும் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.

பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் கூட்டம் குறைய புது ஏற்பாடு

சிங்கப்பூரில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கூடங்களில் இருந்து வெளியே வருவதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்ள பல பள்ளிக்கூடங்கள் புதிய ஏற்பாடு ஒன்றைப் பின்பற்றுகின்றன. மாணவர்களை வேறுபட்ட நேரங்களில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கும் அந்த ஏற்பாடு, குறிப்பாக கொவிட்-19 தொற்று காலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு வெளியே கூட்டத்தைக் குறைக்க உதவி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி இத்தகைய ஓர் ஏற்பாட்டை 2020ல் முதன்முதலாக நடைமுறைப்படுத்தியது. நேவல் பேஸ் நான் சியாவ், ஈசூன் தொடக்கப்பள்ளிகள், சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி ஆகியவை உள்ளிட்ட இதர பள்ளிகளிலும் அந்த ஏற்பாடு நடப்பில் இருக்கிறது.

பள்ளிகள் விடும் நேரத்தில் மாணவர்களை அழைத்துச் செல்ல பலரும் வாகனங்களில் வருவதால் பள்ளிகளுக்கு வெளியே சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தி வைப்பது, வரிசையைத் தவறான முறையில் முந்திச் செல்வது போன்ற செயல்கள் அதிகம் இடம்பெறுவது உண்டு.