சிங்கப்பூரில் மொத்த மக்கள்தொகையில் 51 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) போட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஃபேஸ்புக்கில் நேற்று தெரிவித்தார்.
இப்போது ஏறத்தாழ 42,000 பேர் நாள் ஒன்றுக்குக் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறார்கள்.
கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் ஓமிக்ரான் தொற்று காரணமாக ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
ஓமிக்ரான் தொற்று சென்ற ஆண்டில் பரவிய டெல்டா அலையைவிட வேகமாகப் பரவக்கூடும் என்பதை திரு ஓங் ஏற்கெனவே வலியுறுத்தி இருக்கிறார்.
ஆகையால் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியும் கூடுதல் தடுப்பூசியும் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்றார் அவர்.
ஓமிக்ரான் தொற்று இருந்தாலும் கொவிட்-19 கிருமியுடன் தொடர்ந்து வாழவேண்டி இருக்கும் என்பதே முக்கிய அம்சம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் இந்த மாதத் தொடக்கத்தில் தன்னுடைய கொள்கையைத் திருத்தியது.
பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 18 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்கள் தாங்கள் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்ற நிலையைத் தொடர்ந்து பெற்றிருக்க வேண்டும் என்றால் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியது.
முதல் இரண்டு தடுப்பூசிகளில் இரண்டாவது ஊசியைப் போட்டுக் கொண்டதற்குப் பிறகு ஒன்பது மாதங்கள் ஆனதும் முற்றிலும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர் என்ற நிலையை ஒருவர் இழந்துவிடுவார்.
தொற்று கூடி, குறையும்
இதனிடையே, சிங்கப்பூரில் ஓமிக்ரான் அலை வேகமாகக் கூடி உச்சத்தை தொடும் வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் கருத்துரைத்துள்ளார்.
தொற்று தென்ஆப்பிரிக்காவில் நிகழ்ந்ததைப்போல உச்சத்தைத் தொட்டு பிறகு வேகமாக குறைந்துவிடும் என்று சென்ற வாரம் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் குறிப்பிட்டார்.
அடுத்த அலை எந்த அளவுக்கு இருக்கும் என்பது சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தும் கட்டுப்பாடுகளைச் சார்ந்திருக்கும் என்றும் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் தெரி வித்தார்.

