சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து உள்ளது.
இங்கு 2020 முடிவில் அத்தகைய 1,397 வாகனங்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை சென்ற ஆண் டின் முடிவில் 3,713 ஆகக் கூடியது.
அதே காலகட்டத்தில் மின்சார கார்களின் எண்ணிக்கை 1,725 அதிகரித்து உள்ளது.
மாறாக அதற்கு முந்தைய 12 மாதத்தில் இந்த அதிகரிப்பு வெறும் 97 கார்களாக இருந்தது.
முற்றிலும் மின்சாரத்தில் ஓடும் கார்களின் எண்ணிக்கையும் சென்ற ஆண்டு முடிவில் 0.46 விழுக்காடாகக் கூடியது.
இருந்தலும்கூட மொத்த வாகனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.
சிங்கப்பூர் சாலைகளில் ஏறத்தாழ 964,000 வாகனங்கள் ஓடுகின்றன. அவற்றில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 0.4% கூட இல்லை.
இதனிடையே, 2025ஆம் ஆண்டு வாக்கில் இத்தகைய வாகனங்களுக்கான தேவை சூடுபிடிக்கும் என்று கார் விநியோகிப்பாளர்களும் வல்லுநர்களும் தெரிவித்த தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
அரசாங்கம் பெட்ரோல், டீசல் கார்களை 2040ல் சாலைகளைவிட்டு கட்டம் கட்டமாக அகற்றிவிட இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
வரும் 2030ல் மின்சார வாகனங்களுக்காக 60,000 மின்னேற்றி இடங்களை அமைக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
அரசாங்கத்தின் ஊக்குவிப்புகள், பலதரப்பட்ட மின் வாகனங்கள், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் வருகை ஆகியவை இங்கு மின்சார வாகனங்கள்- குறிப்பாக 2021 பிற்பகுதியில் அதிகரித்ததற்கான முக்கிய காரணங்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசலில் ஓடும் கார்களின் விலையுடன் ஒப்பிடும்போது மின் வாகனங்களுக்கான விலை குறைந்து இருக்கிறது.
இதுவும் மின்சார வாகனங்களில் நாட்டம் அதிகரிக்க காரணம் என்று கேபிஎம்ஜி நிறுவனத்தில் உலகப் பொதுப் போக்குவரத்துத் துறை இணைத் தலைவர் திரு சத்யா ராமமூர்த்தி கூறினார்.
சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறிக்கொள்ள ஆதரவு அளிக்க மேலும் பல கொள்கை மாற்றங்களைச் செய்யலாம் என்று இவர் கருத்துரைத்தார்.
மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை அகற்றுவது, வருடாந்திர பதிவு வரியைக் குறைப்பது, மின் வாகனங்களை இலவசமாக நிறுத்தி வைக்க அனுமதிப்பது ஆகியவற்றை திரு ராமமூர்த்தி எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

