திமத்தி டேவிட்
பிரதமருடன் புதுடெல்லிக்கும் இலங்கைக்கும் அதிகாரத்துவ பயணம், சென்னையில் திறனாளர் கலாசாரப் பரிமாற்ற திட்டம், மும்பையில் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்றுவிப்புப் பயிலரங்கு, ஆஸ்திரேலியாவில் ராணுவப் பயிற்சி, தமிழ்நாட்டில் திரையுலக நட்சத்திரப் பட்டாளத்துடன் செய்தியாளர் கூட்டம், கோலாலம்பூரில் தீபாவளிக் கொண்டாட்டம் என உலகில் பல இடங்களுக்குக் கொண்டு சென்றுள்ளது என் பணி.
புகைப்படங்களை வித்தியாசமான கோணத்தில் எடுப்பதுடன் செய்தியாளராகவும் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் முரசில் தொடங்கியது என் பயணம்.
பின்னர், தேசிய நாளிதழான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் மூன்றரை ஆண்டு காலம் பணியாற்றிவிட்டு தற்போது சமூகத்தின் குரலாக ஒலித்து வரும் தமிழ் முரசு நாளிதழில் மீண்டும் இணைந்துள்ளேன்.
ஆங்கிலப் பெயர் கொண்ட எனக்கு, தமிழில் எளிதில் பேசவும் எழுதவும் முடியுமா என்று பள்ளிப் பருவத்தில் என்னைப் பலரும் கேலி செய்துள்ளனர்.
தொடக்கக் கல்லூரிவரை நான் உயர்தமிழ் பயின்றபோதும், தமிழ்தான் எனக்குச் சோறு போடும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வி பெற்றால் சிறந்த வேலை வாய்ப்பு கிட்டும் என்ற இலக்கோடு செயல்படுவதில் தவறு இல்லை. அதேநேரத்தில் வெற்றி பெறவும் இலக்கை அடையவும் பாதைகள் பல உண்டு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டம் பெற்ற நான், புகைப்படச் செய்தியாளராக பணிபுரிகிறேன். எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் பொறுப்பையும் கடமையையும் எனக்கு வலியுறுத்தி வருகிறது இந்த ஊடகப் பணி.
எழுத்துத் திறனின் முக்கியத்துவம், புகைப்படக்கலை மீதான உயரிய மதிப்பு, தமிழ் மீதான ஆர்வம், நாட்டம் ஆகியவற்றை வளர்க்கும் இன்றியமையாத தளமாக எனக்கு அமைந்துள்ளது.
ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கவும் தலைமைத்துவம், ஒழுக்கம், பிறருடன் பழகுவதற்கான பண்புகளை வலுப்படுத்தவும் இணைப்பாட நடவடிக்கைகள், வேலைப் பயிற்சி அனுபவம் போன்றவை என் பணியில் ஏற்படும் சவால்களைச் சந்திக்க உதவி வருகின்றன.
திறமைக்கு மட்டுமின்றி கடின உழைப்புக்கும் அங்கீகாரம் வழங்கும் வண்ணம் எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகக் குழு இடையே சிறப்புக் கட்டுரைக்கான பிரிவில் சிறந்த புகைப்படத்துக்கான விருது பெற்றிருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அனுதினமும் புதிய அனுபவங்களைப் பெறுவதும் நாளை என்ன எதிர்பார்ப்பது என்று அறிந்திராத உற்சாகமும் சற்றும் சலிப்புத் தட்டாமல் தொடர வைக்கிறது எனது தமிழ் ஊடகப் பணி.

