'இன்று நாங்­கள் வெற்­றி­யா­ளர்­கள்'

'இன்று நாங்­கள் வெற்­றி­யா­ளர்­கள்'

2 mins read
d326059e-ac46-473c-aa8c-a3d20c722cb0
-

சக்தி மேகனா

கடந்த ஆண்டு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லின்­போது, இணைய வகுப்­பு­க­ளின் மூலம் நண்­பர்­க­ளு­டன் இணை­வது பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­குச் சற்று சிர­ம­மாக இருந்­தது. தனிமை கார­ண­மாக சில மாண­வர்­கள் மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் ஆளா­கி­னர். மாண­வர்­கள் சிலர் இதற்­குத் தீர்வு காணும் வகை­யில் 'எடி­யூ­கெ­தர்' எனும் கற்­றல் செயலி / இணை­யத்­த­ளத்தை உரு­வாக்­கும் திட்­டத்தை உரு­வாக்­கி­னர்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அந்த மாண­வர்­கள், மாண­வர்­க­ளைத் தங்­கள் நண்­பர்­க­ளு­டன் மெய்­நி­க­ராக இணைக்­கும் நோக்­கத்­தில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள 'எடி­யூ­கே­தர்' எனும் இந்­தத் திட்­டம், நீடித்த நிலைத்­தன்­மை­யை­யும் தொழில்­நுட்­பத்­தை­யும் இணைக்­கும் 'சஸ்­டே­னத்­தான்' போட்­டி­யில் முதல் பரி­சைத் தட்­டிச் சென்­றது.

கைபே­சி­யில் பதி­வி­றக்­கம் செய்­யக்­கூ­டிய இந்­தச் செய­லி­யில் பாடக் குறிப்­பு­களும் இடம்­பெ­றும். மேலும், மாண­வர்­கள் தங்­கள் ஐயங்­க­ளைத் தீர்த்­துக்­கொள்­வ­தற்கு வச­தி­யும் ஏற்­ப­டுத்­தித் தரப்­படும்.

உயர்­கல்வி நிலைய மாண­வர் களுக்­கான 'சஸ்­டே­னத்­தான்' போட்­டியை இரண்­டா­வது ஆண்­டாக 'டாடா ஆலோ­ச­னைச் சேவை­கள்' சிங்­கப்­பூ­ரில் நடத்­தி­யுள்­ளது.

இளை­யர்­கள் பொதுத்­துறை, தனி­யார் துறை­யி­ன­ரு­டன் இணைந்து, தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யு­டன் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண வேண்­டும் என்­பதே இப்­போட்­டி­யின் முக்­கிய நோக்­கம்.

இறு­திச் சுற்­றில் ஐந்து உயர்­கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த ஐந்து குழுக்­கள் போட்­டி­யிட்­டன.

சாங்கி தொழிற்­பேட்­டை­யில் உள்ள 'டாடா' நிறு­வன வளா­கத்­தில் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று இறு­திச் சுற்­றுப் போட்­டி­யும் அதற்­கான பரி­ச­ளிப்­பும் நடை­பெற்­றன.

நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற அதி­பர் ஹலிமா யாக்­கோப், "சமு­தா­யத்தை வடி­வ­மைப்­ப­தில் இளை­யர்­கள் முக்­கி­யப் பங்­காற்­று­கின்­ற­னர். உல­க­ளா­விய சவால்­க­ளுக்­குத் தீர்­வு­கள் காண்­ப­தற்கு, 'சஸ்­டே­னத்­தான்' ஒரு சிறந்த தள­மாக உள்­ளது," என்று கூறி­னார்.

"இப்­போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­தால் ஏட்­டுக்­கல்­வி­யாக பயின்­றதை நடை­மு­றைப்­ப­டுத்­தும் வாய்ப்­புக் கிடைத்­தது. மற்­ற­வர்­க­ளு­டன் இணைந்து வேலை செய்­ய­வும் பலர் முன்­னி­லை­யில் ஊக்­கத்­து­டன் பேச­வும் நாங்­கள் கற்­றுக்­கொண்­டோம்," என்­ற­னர் வெற்றி பெற்ற குழு­வி­னர்.

"மாண­வர்­கள் படிப்­பில் கவ­னம் செலுத்­து­வ­து­டன் இது­போன்ற போட்­டி­க­ளி­லும் பங்­கேற்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் முழு­மை­யான வளர்ச்­சி­யைப் பெற முடி­யும்," என்று அம்­மா­ண­வர்­கள் கூறி­னர்.

வெற்றி பெற்ற முதல் மூன்று குழுக்­க­ளுக்­குத் தலா $5,000, $3,000, $2,000 பரி­சுத்­தொ­கை­கள் தரப்­பட்­டன. மேலும், தாங்­கள் முன்­மொ­ழிந்­துள்ள செயலி/இணை­யத்­த­ளத்தை உரு­வாக்­கும் வாய்ப்­பு­களும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.