வெளிநாட்டு ஊழியர்களின் தகவல்களைப் பயன்படுத்தி முகக்கவசங்கள் திருடியவருக்கு சிறைத்தண்டனை

வெளிநாட்டு ஊழியர்களின் தகவல்களைப் பயன்படுத்தி முகக்கவசங்கள் திருடியவருக்கு சிறைத்தண்டனை

2 mins read
3a67a7fa-d960-4dab-8e02-b316aa064193
வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள எண்களைப் பயன்படுத்தி முகக்கவசங்களை பெற்றுக்கொண்ட சிங்கப்பூரருக்கு ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.  -

வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள எண்களைப் பயன்படுத்தி முகக்கவசங்களை பெற்றுக்கொண்ட சிங்கப்பூரருக்கு ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தெமாசெக் அறநிறுவனம் இரண்டு முறை இலவச முகக்கவசங்களை விநியோகித்தபோது, சுவா சா மே எனும் அந்த 48 வயது மாது முகக்கவசங்களைத் தவறான வழியில் பெற்றுக்கொண்டார்.

சுமார் $3,000 மதிப்புள்ள 397 முகக்கவங்களை அவர் பெற்றதாகத் தெரியவந்தது.

அந்த முகக்கவசங்களை அவர் தம்முடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் வேலை பார்த்துவந்த சுவா, இரண்டு உற்பத்தி நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளம், வேலை அனுமதிச் சீட்டு விவகாரங்களைக் கவனித்து வந்தார்.

தம்மிடம் கைவசம் இருந்த வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள எண்களைப் பயன்படுத்தி முகக்கவங்களை அவர் எடுத்துகொண்டார்.

சிங்கப்பூரை விட்டுச் சென்ற ஊழியர்கள், கொவிட்-19 காரணமாக சிங்கப்பூருக்குள் நுழைய முடியாத ஊழியர்கள் என்று தாம் கருதியவர்களின் அடையாள விவரங்களை அவர் பயன்படுத்திகொண்டார்.

இயோ சூ காங் சமூக மன்றத்தில் வைக்கப்பட்ட முகக்கவச தானியிக்க இயந்திரத்திலிருந்து அவர் முகக்கவசங்களை எடுத்துக்கொண்டார்.

சென்றாண்டு ஜுன் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சுவா அந்தக் குற்றங்களைப் புரிந்தார்.

சென்ற அக்டோபர் மாதம் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தானியிக்க இயந்திரத்திலிருந்து முகக்கவசத்தை எடுக்க முயன்று முடியாமல் போனது. அதனையடுத்து அவர் போலீஸ் புகார் செய்தார்.

கண்காணிப்பு கேமரா வீடியோவில், சுவா மற்றவர்களின் எண்களை பதிவுசெய்வது விசாரணையில் புலப்பட்டது.

இலவசமாக வழங்கப்படும் முகக்கவசங்களை தவறான முறையில் பெறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெமாசெக் அறநிறுவனம் எச்சரித்தது.