சிங்கப்பூரில் முக்கிய ஏற்றுமதிகளின் விகிதம் தொடர்ந்து 13வது மாதமாக கடந்த டிசம்பரில் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் 2021ஆம் ஆண்டு, 11 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியைக் கண்டது.
அதிகமானோர் வீட்டிலிருந்து வேலை பார்த்ததால் கைபேசிகள், கணினிகள் உள்ளிட்ட மின்சாரப் பொருள்களுக்கான தேவை அதிகரித்தது ஏற்றுமதி விகிதம் கூடியதற்கு ஒரு காரணம்.
மருந்து நிறுவனங்கள், 'பெட்ரோகெமிக்கல்' எனப்படும் பெட்ரோல் ரசாயனம் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்ததும் ஏற்றுமதி வளர்ச்சிக்குக் கைகொடுத்தது.
எண்ணெய் சாரா பொருள்களுக்கான ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அடிப்படையில் 18.4 விழுக்காடு அதிகரித்ததாக அரசாங்கத்தின் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெளியிட்ட தகவல்கள் தெரிவித்தன. எனினும், கடந்த நவம்பர் மாதம் பதிவான வளர்ச்சியைவிட இந்த விகிதம் 5.8 விழுக்காடு குறைவு. நவம்பர் மாதம் எண்ணெய் சாரா ஏற்றுமதி 24.2 விழுக்காடு அதிகரித்தது. இது, சுமார் ஒன்பது ஆண்டுகளில் காணப்படாத வளர்ச்சி.
சென்ற ஆண்டு முழுவதற்கும் எண்ணெய் சாரா ஏற்றுமதி 12.1 விழுக்காடு கூடியது என்றும் 2020ஆம் ஆண்டு இந்த விகிதம் 4.3 விழுக்காடாகப் பதிவானதாகவும் மேபேங்க் வங்கி கணித்தது. மேலும், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்ற ஆண்டுதான் எண்ணெய் சாரா ஏற்றுமதி ஆகப் பெரிய வளர்ச்சி கண்டதாக அது தெரிவித்தது.
சென்ற மாதம் சீனாவுக்கான ஏற்றுமதி 36.3 அதிகரித்தன. எனினும், நவம்பர் மாதம் பதிவான 45.3 விழுக்காட்டைக் காட்டிலும் இது குறைவு.

