உட்லண்ட்ஸ் பெருவிரைவு ரயில் நிலையத்தில் கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களன்று 20க்கும் அதிகமானோர் பொது இருக்கைகளிலும் நடைபாதையிலும் உறங்கிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு ஊழியர்களான ஆண்கள். சில வேளைகளில் கனரக இயந்திரங்களுக்கு அருகே இவர்கள் உறங்குவர்.
வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்கென உட்லண்ட்ஸ் பெருவிரைவு ரயில் நிலையத்திற்குப் பின்னால் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் தொடக்கத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது ஊழியர்கள் மீண்டும் கூடாரங்களில் ஓய்வெடுத்தனர்.
எனினும், சென்ற மாதம் பல வேளைகளில் இரவு 11 மணியளவில் சில ஊழியர்கள் வெவ்வேறு இடங்களில் ஓய்வெடுத்தனர். அட்டைகள், பிளாஸ்டிக் பாய்கள் ஆகியவற்றின் மேல் இவர்கள் ஓய்வெடுத்தனர். நிர்வாகி வேலைக்கு முன்னதாகவே வரச் சொன்னதால் வேறு வழியின்றி இவ்வாறு செய்ததாகவும் சில ஊழியர்கள் கூறினர்.
ஓய்வெடுக்கக்கூடாத பொது இடங்களில் ஊழியர்கள் உறங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுக்கும். இதன் தொடர்பில் 2019ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 20க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு அபராதம் விதித்துள்ளது அல்லது எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பொதுமக்களில் சிலரும் உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்தில் உறங்குவது தெரிய வந்தது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தன்னிடம் அல்லது தன்னுடன் இணைந்து செயல்படும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளிடம் ஆதரவு பெறும் இத்தகையோரின் எண்ணிக்கை ஐந்து மடங்காகியுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

