குறுஞ்செய்தி மூலம் நிகழ்த்தப்பட்ட மோசடி காரணமாக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழந்த தனது வாடிக்கையாளர்களுக்கு இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து நல்லெண்ண அடிப்படையில் பணம் வழங்கியிருப்பதாக ஓசிபிசி நேற்று தெரிவித்தது.
இதுவரை 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
ஒவ்வொரு சம்பவத்தின் தனிப்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டு அவற்றை சரிபார்த்து உறுதி செய்த பிறகு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட தொகை குறித்து ஓசிபிசி வங்கி தகவல் வெளியிடவில்லை.
ஓசிபிசி வங்கியின் பெயரில் மோசடிக்காரர்கள் அவ்வங்கியின் வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்.
அந்த மோசடி வலையில் கிட்டத்தட்ட 470 ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் சிக்கி தங்கள்
சேமிப்புகளை இழந்தனர்.
குறைந்தது $8.5 மில்லியனை மோசடிக்காரர்கள் பறித்தனர்.
ஒருமுறை மறைச்சொல், பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை ஓசிபிசி அனுப்பும் அதே குறுஞ்செய்தித் தளத்தில் மோசடிக்காரர்கள் குறுஞ்செய்தி அனுப்பியதால் வாடிக்கையாளர்கள் அவற்றை நம்பி ஏமாந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடியால் பலர் பாதிக்கப்பட்டதை அடுத்து, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக குறுஞ்செய்தி அனுப்புவோரை முன்பதிவு செய்ய வைக்கும் அணுகுமுறையை நடைமுறைப்படுத்த கோரி தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் இணையம் மூலம் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் 800க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கிடையே, தனது செயல்முறையில் உள்ள குறைபாடுகளை அடையாளம் காண ஓசிபிசி விரிவான விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி அத்தகைய குழப்பங்கள், இழப்புகள் ஏற்படாதிருக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அது எடுக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று கூறியது.
மறுஆய்வுக்குப் பிறகு பொருத்தமான மேற்பார்வை நடவடிக்கைகள் குறித்து ஆணையம் முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"அண்மையில் நடந்த குறுஞ்செய்தி மூலம் வங்கி விவரங்
களைப் பெறும் மோசடியைக் கடுமையான குற்றமாக சிங்கப்பூர் நாணய ஆணையம் கருதுகிறது. பல வாடிக்கையாளர்களை அது வெகுவாகப் பாதித்துள்ளது," என்று ஆணையத்தின் நாணய மேற்பார்வைப் பிரிவின் துணை நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஹோ ஹெர்ன் ஷின் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ஆணையம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
"மோசடிக் குற்றங்களைத் தடுக்க அனைத்து வங்கிகளும் உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆணையம் எதிர்பார்க்கிறது.
"மோசடியால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் உடனடி உதவி வழங்க வேண்டும்.
"மின்னிலக்க வங்கிச் சேவை தொடர்ந்து பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வங்கித் துறை முழுவதற்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்துடன் ஆணையம் இணைந்து செயல்படுகிறது," என்றார் திருவாட்டி ஹோ.
அண்மைய மோசடி வெளிச்சத்துக்கு வந்த பிறகு ஓசிபிசி எவ்வாறு, எத்தகைய நடவடிக்கைகள் எடுத்தது என்பது தொடர்பாக அதனுடன் ஆணையம் கலந்துரையாடி வருகிறது. இன்னும் நல்ல வாடிக்கையாளர் சேவை வழங்கியிருக்கலாம் என ஓசிபிசி ஒப்புக்கொண்டது.

