வேலைக்கு ஆள் சேர்க்கும் பணியில் இருந்த பெண் ஒருவர், வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் 397 முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டார்.
தமது நண்பர்கள், குடும்பத்தாருடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் அவர் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
தெமாசெக் அறநிறுவனம் இலவச முகக்கவசங்களை இருமுறை விநியோகித்தபோது 48 வயது சுவா சா மே இக்குற்றத்தைப் புரிந்தார். அவர் சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட முகக்கவசங்களின் மொத்த மதிப்பு $3,176 ஆகும்.
தெமாசெக் அறநிறுவனத்தை ஏமாற்றியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சுவா ஒப்புக்கொண்டார். அவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றங்களைப் புரிந்தபோது கிளேரியன்ட் சிங்கப்பூர், அக்ரோமா சிங்கப்பூர் ஆகிய நிறுவனங்களுக்காக சம்பளம், வேலை அனுமதி அட்டை விவகாரங்கள் தொடர்பான பணியை சுவா செய்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை சுவா பெற்றுக்கொண்டார்.
சமூக அளவில் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க அனைத்து குடியிருப்பாளர்
களுக்கும் விநியோகிக்கப்பட்ட முகக்கவசங்களில் 897 முகக்கவசங்களை அவர் முறையற்ற வகையில் எடுத்துக்கொண்டார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் சிங்கப்பூரைவிட்டுச் சென்றிருக்கக்கூடும் அல்லது சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது என்று எண்ணிய சுவா அவர்களது அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டார்.
வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள அட்டை எண்களைத் தாளில் குறித்துக்கொண்டு இயோ சூ காங் சமூக நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி இயந்திரங்களிலிருந்து முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் 397 முறை செய்தார்.
கிளேரியன் தென்கிழக்காசிய நிறுவனத்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவரால் தானியங்கி இயந்திரத்திலிருந்து முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனதை அடுத்து, 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் காவல்துறையிடம் புகார் செய்தார்.
அவருக்காக ஒதுக்கப்பட்ட முகக்கவசம் ஒரு வாரத்துக்கு முன்பே பெறப்பட்டுவிட்டதாக தானியங்கி இயந்திரம் தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர்களின் அடையாள அட்டை எண்களை தானியங்கி இயந்திரத்தில் சுவா தட்டச்சு செய்து முகக்கவசங்
களைப் பெற்றுக்கொண்டது கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டபோது மொத்தம் 454 முகக்கவசங்களை அவர் ஒப்படைத்தார்.
அவற்றை அவர் தமது வீட்டில் வைத்திருந்தார்.
ஆனால் சுகாதார அடிப்படையில் அந்த முகக்கவசங்களை தெமாசெக் அறநிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது.

