புதைபடிம எரிபொருள் துறையுடனான தொடர்பைத் துண்டித்து
விடும்படி சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உயர் கல்வி நிலையங்களுக்கும் புதைபடிம எரிபொருள் துறைக்கும் இடையிலான தொடர்புகள் உலகளாவிய நிலையில் கண்காணிக்கப்படுவதை அடுத்து, சிங்கப்பூரிலும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதைபடிம எரிபொருள் அற்ற எதிர்காலத்துக்கு அழைப்பு விடுத்திருக்கும் மாணவர் அமைப்பு 68 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அதன் இணையப்பக்கத்தில் நேற்று பதிவேற்றம் செய்தது.
புதைபடிம எரிபொருள் துறையுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அத்துறை தொடர்பான ஆய்வுகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்தும்படியும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் உட்பட ஏழு உள்ளூர் பல்கலைக்கழகங்களை அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.
எண்ணெய், எரிவாயு, நிலக்கரி துறைகளில் உள்ள வேலைகளில் சேர மாணவர்களை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்கக்கூடாது என்று குரல் எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துறைகளில் உள்ள வேலைகளில் சேர மாணவர்களை ஊக்கமளிக்க வேண்டும் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது. நிபுணத்துவ மேம்பாட்டு நிகழ்வுகளில் புதைபடிம எரிபொருள் துறை தொடர்பான பணிகள் பற்றி பரவலாகப் பேசப்படும்போது அது மாணவர்களை ஈர்ப்பதாக அமைப்பு கூறியது. எதிர்காலத்தில் அத்துறை வழங்கக்கூடிய வேலை வாய்ப்புகள் குறையும் என்று அது கூறியது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் அறிக்கையின் பிரதான பங்களிப்பாளர்கள் என்று அமைப்பின் செய்தித்தொடர்பாளரான நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டக் கல்வி மாணவரான 23 வயது ஷான் ஆங் கூறினார். புதைபடிம எரிபொருள் துறையுடன் பல்கலைக்கழகங்கள் தொடர்பைத் துண்டித்துக்கொள்வது குறித்து பட்டக் கல்வி மாணவர்கள், பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்கள், மற்ற நிபுணர்கள் உட்பட மொத்தம் 64 பேரிடம் அமைப்பு ஆலோசனை பெற்றது. தற்கால பருவநிலை மாற்றத்துக்கு புதைபடிம எரிபொருளை எரிப்பதே முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

