சக ஊழியரை மானபங்கம் செய்த விமானச் சிப்பந்தி
தமக்குக்கீழ் விமானச் சிப்பந்தியாகப் பணிபுரிந்த பெண்ணை உயர் பதவி ஆண் விமானச் சிப்பந்தி ஒருவர் மானபங்கம் செய்ததாகத் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரிலிருந்து மணிலாவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருவரும் பணியில் இருந்தபோது மானபங்கக் குற்றம் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அவரது பெயரையும் மானபங்கம் செய்த ஆணின் பெயரையும் அவர்கள் வேலை பார்த்த விமானச் சேவை குறித்த விவரத்தையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்குப் பிறகு அந்த 50 வயது ஆண் விமானச் சிப்பந்தியைக் குற்றவாளி என மாவட்ட நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அந்த ஆண் விமானச் சிப்பந்திக்கு எதிராக வரும் மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏமாற்றிப் பணம் பறித்ததாக
நிதி ஆலோசகர் ஒப்புதல்
ஐவரை ஏமாற்றி அவர்களிடமிருந்து மொத்தம் $170,000 பறித்ததை முன்னாள் ஓசிபிசி நிதி ஆலோசகர் ஒப்புக்கொண்டார். சூதாட்டப் பழக்கத்தால் ஏற்பட்ட கடன்களை அடைக்க அவ்வாறு செய்ததாக ஹோய் வெய் கிட் கூறினார்.
தொழில்நுட்பத்தில் அவ்வளவு பழக்கமில்லாத வங்கி வாடிக்கையாளர்களை அவர் தமது மோசடி வலையில் சிக்க வைத்தார். நிதி தொடர்பான திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள அவர்கள் ஹோயை முழுமையாக நம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.
உயர் வட்டி விகிதம் கொண்ட வங்கி கணக்கிற்கு அவர்கள் தகுதி பெறுவதாகச் சொல்லி ஆவணங்களில் கையெழுத்திட வைத்து வாடிக்கையாளர்களிடமிருந்து ஹோய் பணம் பறித்தார்.
ஆனால் அந்த வங்கிக் கணக்குகளைத் தொடங்காமல் பணத்தை அபகரித்தார் 34 வயது ஹோய்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஹோய் ஒப்புக்கொண்டார்.
ஆகப் பழைய சீனப் பாரம்பரிய சூளையின் 80வது ஆண்டு விழா
சிங்கப்பூரின் ஆகப் பழைய சீனப் பாரம்பரிய சூளை அதன் 80வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. இதனை முன்னிட்டு தாவ் குவாங் கிலே கலைஞர்கள் எனும் ஓவியக் கலை அமைப்பைச் சேர்ந்த 29 குயவர்கள் தங்கள் திறமையைக் காட்ட முன்வந்துள்ளனர்.
ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் கண்காட்சியில் சிங்கப்பூரின் ஆகப் பழைய சீனப் பாரம்பரிய சூளையில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட 300 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 22 தேதி வரை காலை 11 மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை சிங்கப்பூர் சீனக் கலாசார மையத்தின் ஆறாவது மாடியில் நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.

