டெங்கியைக் குணப்படுத்தும் என நம்பப்படும் புதிய மருந்து ஆராய்ச்சியில் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலகில் முதல்முறையாக மேற்கொள்ளப்படும் இந்த சோதனை வெற்றியடைந்தால், டெங்கியை குணப்படுத்தக்கூடிய மருந்தாக அது அமையலாம்.
தற்போது டெங்கியைக் குணப்படுத்த மருந்து கிடையாது. டெங்கி அறிகுறிகளான காய்ச்சல், உடல்வலி போன்றவற்றை குணப்படுத்தவே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிங்ஹெல்த் நிறுவனம் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
டெங்கி கிருமி தொற்றும்போது, அது நம்முடைய நோய் எதிர்ப்பு அணுக்களைத் தாக்கி, இனப்பெருக்கம் செய்கிறது.
கிருமியில் இருக்கும் NS3, NS4B எனும் இரண்டு புரதங்கள் இணைவதால் கிருமியின் இனப்பெருக்கம் சாத்தியமாகிறது.
இந்த இரு புரதங்கள் இணைவதைப் புதிய மருந்து தடுக்கும் என சிங்ஹெல்த் விளக்கியது.
திரவ வடிவில் மருந்து இருக்கும். டெங்கி பாதிப்பின் ஆரம்பகட்டத்திலேயே மருந்தை உட்கொள்ளவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
ஆராய்ச்சி வெற்றி கண்டால், மருந்து மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் தயாராகிவிடும் என சிங்ஹெல்த் நம்பிக்கை தெரிவித்தது.
அதிகரிக்கும் வெப்பநிலை, நகரமயமாதல் ஆகிய காரணங்களால் டெங்கி நிலைமை மோசமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஆக அதிமாக ஏறத்தாழ 35,300 பேரை டெங்கி தொற்றியது. குறைந்தது 29 பேர் மாண்டனர்.

