தொடக்கப் பள்ளி மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விண்ணப்பித்திருப்பதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் மூன்று நாள்களுக்கு முன் இரண்டாம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தொடங்கியதாகவும் ஃபேஸ்புக் பதிவில் திரு சான் கூறினார்.
ஐந்திலிருந்து 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சென்ற மாதம் 27ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வயதில் மூத்த சிறுவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 100,000க்கும் அதிகமான சிறுவர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டோர், போட்டுக்கொள்ளாதோர் ஆகிய இரு தரப்பினருக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.
அத்தகைய கட்டுப்பாடுகளை 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டம் இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இம்மாதம் 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"மோசமாக நோய்வாய்ப்படும் சாத்தியம் சிறுவர்களுக்குக் குறைவு, முடிந்தவரை சிறுவர்களுக்கு முழுமையான கல்வி கிடைப்பதைப் பாதுகாக்க நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்," என்று திரு ஓங் குறிப்பிட்டிருந்தார்.

