சட்டவிரோதமாக மீன்பிடித்த முன்னாள் ஆய்வாளர்
அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பில் ஆய்வாளராக இருந்த ஓர் ஆடவர் சட்டவிரோதமாக மீன் பிடித்திருக்கிறார். மேலும், அப்பர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் அவர் சட்டவிரோதமாக மீன்பிடித்ததைக் கண்டுபிடித்த 'ஆக்சிலியரி போலிஸ்' எனும் துணை காவல்துறை அதிகாரியைத் தாக்கவும் செய்திருக்கிறார். 29 வயது சுவா சீ ஜியே மீது சுமத்தப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. அவற்றில் மூன்று குற்றச்சாட்டுகள் பூங்காக்கள், மரங்கள் சட்டத்தின்கீழும் ஒன்று அரசாங்க ஊழியரைத் தாக்கியதன் தொடர்பிலும் சுமத்தப்பட்டன.
இச்சம்பவம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அந்த காலகட்டத்தில் சுவா அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பில் ஆய்வு அதிகாரியாக வேலை செய்தது நீதிமன்றத்தில் தெரியவந்தது.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுவா தனது அமைப்பிலிருந்து வெளியேறியதாக அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது. வரும் திங்கட்கிழமையன்று சுவாவிற்குத் தீர்ப்பளிக்கப்படும்.
தீப்பிடித்துக்கொண்ட காப்பிக் கடை மீண்டும் திறப்பு
தெம்பனிஸில் ஐந்து மாதங்களுக்கு முன்பு தீப்பிடித்துக்கொண்ட காப்பிக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தெம்பனிஸ் ஸ்திரீட் 81 வீவக புளோக் 823ஏ-ல் உள்ள காப்பிக் கடை இம்மாதம் 10ஆம் தேதியன்று மறுபடியும் இயங்கத் தொடங்கியது.
மீன் சூப் விற்கும் கடையிலிருந்து ஆரம்பித்ததாகக் கருதப்படும் தீ சில நிமிடங்களில் கூரையை நோக்கிப் பரவியது. அதற்குப் பிறகு ஏற்பட்ட வெடிப்பால் இங்கிருந்த அனைத்து 15 கடைகளும் பாதிக்கப்பட்டன.
வெற்றிகரமாக மீண்டும் இயங்குவதைப் பாராட்டி இந்தக் காப்பிக் கடையின் நுழைவாயிலில் 10ஆம் தேதியிலிருந்து பூக்கள் வைக்கப்பட்டன. அனைத்து கடைக்காரர்களுக்கும் வர்த்தகம் முழுவீச்சில் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தக் காப்பிக் கடையின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பல புதிய கடைகளும் இப்போது உள்ளன. கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். காப்பிக் கடையில் தீச்சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு இல்லாத பாதுகாப்பு விதிமுறைகளும் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளன.
1,165 கிருமித்தொற்று சம்பவங்கள்
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி 1,165 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவு. எனினும், ஓமிக்ரான் வகை கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்ட கிருமித்தொற்று குறித்த தகவல்கள் தெரிவித்தன.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 631 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டது, 534 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். ஓமிக்ரான் சம்பவங்களில் 380 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டது, 229 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 1.49லிருந்து 1.6க்குக் கூடியது.

