சிங்கப்பூரின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றின் ஆசிரியர், குறைந்த வயது மாணவியுடன் தகாத உறவு வைத்துக்கொண்டதுடன் தகாத பாலியல் செயல்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த ஆசிரியருக்கு 'இருமனக் குழப்பம்' (bipolar disorder) என்ற மனநோய் இருந்துள்ளதாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
கட்டாய சிகிச்சை ஆணைக்கு அந்த ஆடவர் தகுதிபெறுவது குறித்து மதிப்பிடும் அறிக்கை வேண்டும் என நீதிபதி கோரியுள்ளார்.
ஆடவருக்கு இருந்த மனநோய்க்கும் அவர் புரிந்த பாலியல் குற்றச்செயல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது இந்த மதிப்பீட்டு அறிக்கை வழி கண்டறியப்படும்.
குற்றச்செயல்கள் 2011ல் நடந்ததாகவும் அப்போது ஆடவருக்கு 36 வயது, மாணவிக்கு 15 வயது என்றும் கூறப்பட்டது. தற்போது 47 வயதுடைய அந்த ஆடவர், சிறுவர் மற்றும் இள வயதினர் சட்டத்தின் கீழ் தன் மீது கூறப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
2018ஆம் ஆண்டுவாக்கில் அந்த ஆடவர் ஆசிரியர் பணியில் இல்லை என்று கல்வி அமைச்சு 2020ல் தெரிவித்தது.
ஏப்ரல் மாதத்தில் ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சி ஆசிரியருக்குச் சிறை
மற்றொரு சம்பவத்தில் குறைந்த வயது மாணவியுடன் தகாத பாலியல் செயல்களில் ஈடுபட்ட முன்னாள் பயிற்சி ஆசிரியர் ஒருவருக்கு நேற்று 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மாணவியின் பெற்றோருக்குத் தெரியாமல் தன் வீட்டில் வாரத்தில் நான்கு இரவுகளில் அந்த ஆடவர் மாணவியைத் தங்க வைத்திருக்கிறார். குறைந்தது பத்து முறையாவது இருவரும் பாலியல் செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. ஆசிரியர் ஆகும் தகுதியை அந்த 27 வயது ஆடவர் இழந்துவிட்டதாக கூறப்பட்டது.

