வெறும் 17 வயதே ஆன ஒரு சிறுவன், 'யூடியூப்' காணொளிகளைப் பார்த்து வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டதுடன் தன் தந்தையின் விவரங்களைப் பயன்படுத்தி வாகனங்களை வாடகைக்கும் பெற்றிருந்தார்.
வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படும் வயதை எட்டாத நிலையில் கார் ஓட்டியது, தந்தையின் விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் தற்போது 19 வயதாகும் அந்தச் சிறுவன் நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டார்.
அந்தச் சிறுவன் எட்டு முறை இவ்வாறு வாடகைக்கு வாகனத்தைப் பெற்றதாகவும் இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்ற சமயம், காவலர்களிடம் சிக்கியதாகவும் கூறப்பட்டது. சிறுவர் மற்றும் இள வயதினர் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தபோது சிறுவனுக்கு 17 வயது என்பதால் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
'ட்ரைப்கார்' எனும் உள்ளூர் கார் வாடகை நிறுவனத்திற்குத் தன் தந்தையின் விவரங்களை சிறுவன் சமர்ப்பித்து கணக்கு ஒன்றைத் திறக்க முயன்றார்.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இணையத்தளம் வழியாக 2020ஆம் ஆண்டில் செப்டம்பர் 24ஆம் தேதிக்கும் அக்டோபர் 7ஆம் தேதிக்கும் இடையே அந்தச் சிறுவன் காரை வாகனத்திற்குப் பெற்றுக்கொண்டார்.
இளைஞன், 56 வயதுடைய தன் தந்தைக்குத் தெரியாமல் இவ்வாறு செய்திருந்ததாகவும் கூறப்பட்டது.
சிறுவனுக்கு 17 வயது என்றும் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் அறியாத இரண்டு பயணிகள், அக்டோபர் 7ஆம் தேதியன்று சிறுவனின் வாடகை காரில் பயணம் செய்தனர்.
பின்னிரவு மூன்று மணியளவில் காவல் அதிகாரிகளால் போடப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் நிறுத்தப்பட்டது.
ஓட்டுநர் உரிமத்தைக் காட்டுமாறு சிறுவனின் அதிகாரிகள் கேட்டதை அடுத்து, தன்னிடம் உரிமம் இல்லை என்றும் தனக்கு 17 வயது என்றும் சிறுவன் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவுக்குச் சிறுவன் தகுதிபெறுவது குறித்து அறிக்கை கோரியுள்ளார் நீதிபதி.
வழக்குக்கான தண்டனை விதிப்பு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

