செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cde055ec-d5b6-440e-995f-b98bde889936
-

கடற்கொள்ளை: 6 ஆண்டுகளில்

இல்லாத உச்சம் 2021ல்

சிங்கப்பூர் நீரிணையில் கடந்த ஆண்டு நடந்த கடற்கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களே ஆறு ஆண்டுகளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை என்று கூறப்பட்டது. 2015ஆம் ஆண்டில் பதிவான 99 சம்பவங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டில்தான் ஆக அதிகமாக, 49 கடற்கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருந்தன. ஆசியாவில் கடந்த ஆண்டு 82 கடற்கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருந்தன. இது 2020ஆம் ஆண்டில் பதிவான 97ஐக் காட்டிலும் 15% குறைவு. அதிகப் போக்குவரத்து உள்ள கடல் தடங்களில் ஒன்றாக சிங்கப்பூர் நீரிணை உள்ளதால், கொள்ளையர்கள் அதைக் குறிவைக்கும் சாத்தியம் அதிகம் என்று கூறப்பட்டது. பெரும்பாலான சம்பவங்கள் இருட்டில் நடந்ததாகவும் மூன்று முதல் ஐவர் கொண்ட கும்பல்கள் சிறு படகுகளில் வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அறியப்படுகிறது.

குறுந்தகவல் மோசடி: வங்கி

நல்லெண்ணத்தில் பணம் வழங்கியது

அண்மையில் குறுந்தகவல் மோசடிக்கு ஆளாகி பணத்தைப் பறிகொடுத்த இரண்டு ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களுக்கு, நல்லெண்ணம் கருதி வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்துள்ளது. இருப்பினும் தாங்கள் வங்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, தொகை குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று அவ்விருவரும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நல்லெண்ணம் கருதி ஒரு தொகையை வழங்கி வருவதாக ஓசிபிசி நேற்று முன்தினம் தெரிவித்தது. 30க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தொகை கிடைத்துள்ளதாகவும் வங்கி குறிப்பிட்டது.

சிங்கப்பூர் ஆயுதப் படைத்தளங்களில் மின்னூட்டு நிலையங்கள்

மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டு நிலையங்களை, சிங்கப்பூர் ஆயதப் படை அதன் இரண்டு படைத்தளங்களில் பொருத்தத் திட்டமிட்டுள்ளது. பசுமைத் திட்டத்தின் ஓர் அங்கமான இம்முயற்சி வழி, படைத்தளங்களின் நிரந்தர ஊழியர்களுக்கும் வருகையாளர்களுக்கும் இம்மின்னூட்டு நிலையங்கள் செயல்படும். தற்காப்பு அமைச்சு முன்வைத்த ஏலக்குத்தகை ஒன்றின்படி, கிராஞ்சி முகாம் III படைத்தளத்தில் நான்கு மின்னூட்டு நிலையங்களும் கொம்பாக் படைத்தளத்தில் இரண்டு மின்னூட்டு நிலையங்களும் அமையவுள்ளன. மின்னூட்டு நிலையங்களைப் பயன்படுத்துவோர், கைபேசி செயலி வழி தங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற தொகையைச் செலுத்துவர் என்று கூறப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான 60,000 மின்னூட்டு நிலையங்களைப் பொருத்த வேண்டும் என்ற தேசிய திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது.