சிறப்பான திட்டமிடல், நிறைவான வேண்டுதல்

சிறப்பான திட்டமிடல், நிறைவான வேண்டுதல்

4 mins read
e5e82a74-8644-45fe-892c-76916d0a7648
தைப்பூசத் திருநாளான நேற்று தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளி விதியை முறையாகப் பின்பற்றி, பால்குடம் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். (வலப்படம்) அருள்மிகு லயன் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து முருகப்பெருமான் பெற்று வந்த புனித வேலுக்குப் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. -
multi-img1 of 3

கி. ஜனார்த்­த­னன்

சக்தி மேகனா

ஆ. விஷ்ணு வர்­தினி

நண்­பர்­க­ளான திரு கலைச்­செல்­வன் மணி­ராம், திரு சாமி­நா­தன் வெற்றி­வேல், திரு பால­சுப்­பி­ர­ம­ணி­யம் விக்­னேஷ் ஆகிய மூவ­ரும் அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோவி­லுக்கு நேற்று ஒன்­றாக வந்­தி­ருந்து, பால்­கு­டம் எடுத்து தங்­க­ளது வேண்­டு­தலை நிறை­வேற்­றி­னர்.

கொவிட்-19 பர­வ­லுக்­குப்­பின் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளான அம்­மூ­வ­ரும் ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு நேற்­று­தான் ஒன்­றாக வெளி­யில் வர முடிந்­தது.

"நீண்­ட­கா­லத்­திற்­குப்­பின் ஒன்­றாய்ச் சேர்ந்து வந்­திருப்பது புது­மை­யான உணர்­வாக உள்ளது. இத­னால் மகிழ்ச்­சி­யும் நிம்­ம­தி­யும் அடைந்­துள்­ளோம்," என்று வாகன ஓட்டுநர்களாகப் பணிபுரியும் அவர்­கள் கூறி­னர்.

சென்ற ஆண்­டைப் போலவே இம்­மு­றை­யும் காவடி எடுக்க அனு­மதி இல்லை. பால்­கு­டத்­திற்கு மட்­டுமே அனு­மதி அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. 7,000க்கும் மேற்­பட்­டோர் பால்­கு­டம் எடுத்து, வேண்­டு­தல்­களை நிறை­வேற்­றி­னர்.

நன்கு திட்­ட­மிட்டு, ஏற்­பா­டு­கள் சிறப்­பா­கச் செய்­யப்­பட்­டி­ருந்­த­தால் பக்­தர்­கள் அதிக நேரம் காத்­தி­ருக்­கத் தேவை­யின்றி, விரை­வா­கவே வேண்­டு­தலை முடித்து, இறை­வனை தரி­சித்­துச் சென்­ற­னர்.

"மூன்­றாண்­டு­க­ளாக தைப்­பூ­சத் திரு­வி­ழா­வில் கலந்­து­கொள்­கி­றேன். இம்­முறை கோவில் சற்று அமைதி­யா­கத்­தான் உள்­ளது," என்­றார் உணவு விடுதி மேலா­ள­ரான திரு தங்­க­ராஜ்.

நடைப்பயணமாக வந்த சிலர்

காவ­டி­கள் இல்­லா­த­து­டன் சிராங்­கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோவி­லில் இருந்து ஊர்­வ­ல­மாக தேங் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோவி­லுக்கு வர முடி­யா­த­தும் பக்­தர்­கள் சில­ருக்கு வருத்­த­ம­ளித்­தது.

ஆனா­லும், சிலர் அப்­படி நடைப்­ப­ய­ண­மாக தேங் ரோடு கோவி­லுக்கு வந்­தி­ருந்­த­னர்.

"இவ்­வாண்டு என் மனைவி முதன்­மு­றை­யாக வட­பத்­திர காளி­யம்­மன் கோவி­லில் இருந்து நடந்து வந்­துள்­ளார். இரண்­டாம் கட்­டப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்ட அவர் கடந்த வாரம்­தான் முடி­யி­றக்­கி­னார்," என்­றார் தள­வாடத் துறை­யில் பணி­யாற்­றும் திரு அசோக் குமார்.

ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோவி­லில் இருந்து நடந்து வந்த திரு பிர­க­தீஸ்­வ­ரன், வழக்­க­மான தைப்­பூ­சக் களை இல்­லா­த­போ­தும் கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் இம்­முறை அதி­க­மான பக்­தர்­கள் வந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

தங்­கள் குடும்­பத்­தில் தைப்­பூ­சத் திரு­நாளை மிக முக்­கி­ய­மான விழா­வா­கக் கரு­தும் திரு­வாட்டி லக்‌ஷ்மி, 39, கடந்த 14 ஆண்­டு­க­ளா­கக் குடும்­பத்­து­டன் பால்­கு­டம் எடுத்து வரு­வ­தா­கச் சொன்­னார்.

சிறப்­பான திட்­ட­மி­டல் கார­ண­மாக இம்­முறை காத்­தி­ருப்பு நேரம் குறைந்து, மிக எளி­தா­க­வும் அதே நேரத்­தில் வச­தி­யா­க­வும் இறை­வனை வேண்­டிக்­கொள்ள முடிந்­த­தா­கக் கூறி­னார் அவர்.

அடுத்த ஆண்­டிற்­குள் கிரு­மிப் பர­வல் முற்­றாக ஒழிந்து, முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லா நிலை ஏற்­பட்டு, மீண்­டும் காவ­டி­க­ளைப் பார்க்க வேண்­டும், அவற்­றைப் பிள்­ளை­க­ளுக்­குக் காட்ட வேண்­டும் என்று முரு­கப்­பெ­ரு­மா­னி­டம் வேண்­டிக்­கொண்­டா­தா­கக் கூறி­னார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லை­க­க­ழ­கத்­தில் நூல­க­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி லக்‌ஷ்மி.

மரபை அறிய மகத்தான வாய்ப்பு

நமது பாரம்­ப­ரி­யத்­தைப் பற்றி மேலும் அறிந்­து­கொள்ள தைப்­பூ­சக் கொண்­டாட்­டம் நல்ல தள­மா­க­வும் வாய்ப்­பா­க­வும் விளங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டார் இளை­ய­ரான சக்­தி­வேலு ஜனனி சுருதி, 16.

"வெளி­நா­டு­களில் மிகக் கோலா­க­ல­மாக நடை­பெ­றும் தைப்­பூ­சக் கொண்­டாட்­டங்­க­ளுக்கு இணை­யாக நாமும் இங்கே கொண்­டா­டு­கி­றோம் என்­ப­தைக் காணும்­போது வியப்­ப­டைந்­தோம். பல­ரும் இந்­த நா­ளுக்­கென்றே குறிப்­பாக விடுப்பு எடுத்­துக்­கொண்டு வரு­வது பாராட்­டத்­தக்­கது," என்­றார் அவர்.

முந்­திய ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் இம்­முறை இறை­த­ரி­ச­னம் விரை­வாக முடிந்­து­விட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார், இவ்­வாண்டு தொடக்­கக் கல்­லூ­ரி­யில் சேரும் திட்­டத்­தில் இருக்­கும் சகானா ராம­மூர்த்தி, 17.

தம்­மைப் போன்ற அடுத்த தலை­மு­றை­யி­னர், தைப்­பூ­சம் போன்ற பண்­பாட்டு விழாக்­களில் கலந்­து­கொள்­வது முக்­கி­ய­மெ­னத் தாம் கரு­து­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

சிறுவய­தி­லி­ருந்தே கோவி­லுக்கு வந்து தைப்­பூ­சத்­தைக் கொண்­டாடு­வது தமது குடும்ப வழக்­கம் என்­றார் தற்­போது 'ஏ' நிலைத் தேர்வு முடி­வு­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்­கும் காவியா, 18.

"இவ்­வாண்டு ஊர்­வ­ல­மாக வரும் வாய்ப்பு கிட்­ட­வில்லை. என்­றா­லும், சிங்­கப்­பூர் முரு­கன் கோவில்­களில் நடக்­கும் தைப்­பூச வழி­பாடு­களைக் குடும்­ப­மா­கச் சென்று காண­வேண்­டும் என்று திட்­ட­மிட்­டுள்­ளோம்," என்ற அவர், அடுத்­த­தாக செங்­காங் அருள்­மிகு வேல்­மு­ரு­கன் ஞான­மு­னீஸ்­வ­ரர் கோவி­லுக்­குச் செல்­லத் தயா­ரா­கிக் கொண்­டி­ருந்­தார்.

கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தைப்­பூ­சத் திரு­நா­ளன்று நடை­பெறும் கொண்­டாட்­டங்­க­ளைப் புகைப்­படம் எடுத்து வரு­கின்றார் தன்­னார்­வப் புகைப்­ப­டக் கலை­ஞ­ரான திரு கேசி எங், 35.

இந்­தியா, மலே­சியா, சிங்­கப்­பூர் ஆகிய நாடு­களில் தைப்­பூ­சக் கொண்­டாட்­டங்­க­ளைப் பட­மெ­டுத்த அனு­ப­வம் கொண்­ட­வர் அவர்.

"முரு­கப்­பெ­ரு­மா­னைப் போலவே எங்­கள் சீனப் பண்­பாட்­டி­லும் ஒரு காவல் தெய்­வம் உள்­ளது. அந்த வகை­யில், இரு பண்­பா­டு­க­ளுக்கு இடையே உள்ள சில ஒற்­று­மை­களைக் கண்­ட­றி­வது சுவா­ர­சி­ய­மாக உள்­ளது. இவ்­வாண்டு தைப்­பூச விழா அமைதி­யா­கக் காட்­சி­ய­ளிக்­கிறது. அடுத்த ஆண்டு காவ­டி­ எடுக்க அனு­ம­திக்­கப்­படும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் திரு எங்.

'பால்காவடி எடுக்கவாவது அனுமதி வழங்கியிருக்கலாம்'

அல­குக் காவடி, ஊர்­வ­லம் போன்­றவை இல்­லா­தது பல­ருக்­கும் வருத்­தத்தை அளித்­தா­லும் பால் காவ­டி­க­ளுக்­கே­னும் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­றார் தக­வல் தொழில்­நுட்ப வல்­லு­ந­ரான திரு மதன், 43.

நேற்று ஒரு­நாள் விடுப்பு எடுத்து, நண்­பர்­க­ளு­ட­னும் குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் சேர்ந்து, கோவி­லில் தொண்­டூ­ழி­யம் புரிந்­தார் நன்­யாங் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லும் நாச்சா, 17.

"தொண்டூழிய ஆர்வத்தை என் பெற்றோரே என்னுள் விதைத்தனர்," என்ற அவர், இது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.