ஓசிபிசி பெயரில் மோசடி: வாடிக்கையாளர்கள் இழந்த பணம் அனைத்தையும் திருப்பித்தரும் ஓசிபிசி

ஓசிபிசி பெயரில் மோசடி: வாடிக்கையாளர்கள் இழந்த பணம் அனைத்தையும் திருப்பித்தரும் ஓசிபிசி

1 mins read

ஓசிபிசி வங்கி, அண்மைய குறுந்தகவல் மோசடியில் சிக்கிய அனைத்து ஓசிபிசி வாடிக்கையாளர்களுக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் இழந்த பணத்தை திருப்பியளிக்கும்.

ஓசிபிசி வங்கி புதன்கிழமை (ஜனவரி 19) அன்று வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்தது.

ஏற்கெனவே 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழந்த பணம் தரப்பட்டுள்ளது.

எஞ்சிய வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் பணத்தை வழங்க ஏற்பாடுகளை செய்து வருவதாக ஓசிபிசி வங்கி கூறியது.

ஒவ்வொரு சம்பவத்தையும் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுவதாக ஓசிபிசி குழுமத்தின் தலைமை நிர்வாகி ஹெலன் வோங் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு விவகாரத்தையும் நியாயமாக, சரியாக நடத்துவதற்கு இந்த நடைமுறை முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்கு திருவாட்டி வோங் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

"போலியான இணையத் தளங்களின் மோசடிக்கு ஆளாக நேரிடும் என்பதை அறியாத வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். இதனால் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மோசடியிலிருந்து தப்பியுள்ளனர்," என்றார் திருவாட்டி வோங்.

ஏறக்குறைய 470 ஓசிபிசி வாடிக்கையாளர்கள் கடந்த டிசம்பரில் நடந்த மோசடியில் குறைந்தது 8.5 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளனர்.

சிலர் தங்களுடைய குடும்பத்துக்காக பல ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தை இழந்துவிட்டனர்.