மத்திய சேம நிதி ஓய்வுக்கால சேமிப்புத் திட்டத்தின்கீழ் $68 மில்லியன் மானியத் தொகையை 117,000 மசே நிதி உறுப்பினர்
களுக்கு அரசாங்கம் வழங்கி உள்ளதாக மத்திய சேம நிதிக் கழகம் நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு உறுப்பினர்கள் தங்களது கணக்குகளில் நிரப்பிய தொகைக்கு ஈடாக இந்த மானியம் அவர்களின் கணக்குகளில் இம்மாதம் 7ஆம் தேதி வரவு வைக்கப்பட்டதாகவும் அது கூறியது.
இவர்களில் 10ல் 9 உறுப்பினர்கள் அதிகபட்ச வருடாந்திர மானியத் தொகையாக $600 பெற்றனர்.
$96,000 என்னும் தற்போதைய அடிப்படை ஓய்வுக்காலத் தொகையை தங்களது கணக்கில் வைக்க இயலாத மூத்தோருக்கு உதவும்
பொருட்டு அவர்களின் மத்திய சேம நிதி ஓய்வூதியக் கணக்கில் தொகை நிரப்பும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவோர் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடப்படுகின்றனர். 55 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் அடிப்படை ஓய்வுக்காலத் தொகைக்கும் குறைவாக ஓய்வூதியக் கணக்கில் சேமிப்பு வைத்திருப்போர் மானியத்திற்கான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர். ஒன்றுக்கு மேற்பட்ட சொத்து இருக்கக்கூடாது என்பது போன்ற இன்னும் சில வரம்புகளும் உள்ளன.
இந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்கு 435,000 மத்திய சேம நிதி உறுப்பினர்கள் தகுதிபெறுவதாகவும் இவர்களில் 35,000 பேர் புதிதாகத் தகுதி பெற்றுள்ளதாகவும் கழகம் தெரிவித்தது.
தகுதி பெறும் உறுப்பினர்கள் குறுந்தகவல், வாட்ஸ்அப் தகவல் அல்லது மின்னஞ்சல் வாயிலாக இந்த மாதம் அதற்கான அறிவிப்பைப் பெறுவர்.
"ஓய்வுக்கால கணக்கில் உறுப்பினர்களும் அவர்களின் அன்புக்குரியவர்களும் பணம் நிரப்பியதுபோக, கடந்த ஆண்டு 500க்கும் மேற்பட்ட மூத்தோரின் கணக்குகளில் ஏழு சமூகப் பங்காளிகள் பணம் நிரப்பி உதவினர்.
"இதன்மூலம் அந்த மூத்தோர் இணை மானியத்திற்குத் தகுதி
பெறுவதோடு அதிகமான மாதாந்திர ஓய்வுக்காலத் தொகையை அவர் கள் பெறுவர்," என்று கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அங் மோ கியோ குடும்ப சேவை நிலையம், புக்கிட் தீமா குடிமக்கள் ஆலோசனைக் குழு, ஃபெய் இயூ சமூக சேவை நிலையம், ஹோங் கா நார்த் அடித்தள அமைப்புகள், மசெக சமூக அறநிறுவனத்தின் யூஹுவா கிளை, சாவோ அற
நிறுவனம் மற்றும் உட்லண்ட்ஸ் குடிமக்கள் ஆலோசனைக் குழு ஆகியன அந்த ஏழு சமூகப் பங்காளிகள்.
உறுப்பினர் தமது ஓய்வூதியக் கணக்கில் நிரப்பும் ஒவ்வொரு வெள்ளிக்கும் ஈடாக அரசாங்கமும் அவர்களின் கணக்கில் நிரப்பும். ஆண்டுக்கு அதிகபட்சமாக $600 வரை இந்த மானியம் வழங்கப்படும்.
இந்த மானியத் திட்டம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும்.
117,000 மசே நிதி உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது