பெருந்தொற்றுக் காலத்தில் வேலை, நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சிங்கப்பூரர்கள் தங்களுடைய தாராள மனதை இழந்துவிடவில்லை.
கடந்த ஆண்டு இணையம் வழியாக திரட்டப்பட்ட அறப்பணி நிதிக்கு அவர்கள் சாதனை அளவு நன்கொடை அளித்துள்ளனர்.
கிவிங்.எஸ்ஜி (Giving.sg) எனும் நிதித் திரட்டு இணையத் தளம் ஏறக்குறைய 95.5 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக பெற்றுள்ளது. இதுதான், அந்த இணையத் தளம் தொடங்கப்பட்ட பிறகு திரட்டிய ஆக அதிக அறப்பணி நிதியாகும். கடந்த 2010ல் தேசிய தொண்டூழியம், கொடை அமைப்பு (என்விபிசி) அந்த இணையத் தளத்தை ெதாடங்கியிருந்தது.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு திரட்டப்பட்ட 95.5 மில்லியன் வெள்ளி இரண்டு விழுக்காடு அதிகமாகும். கிருமித்தொற்றுக்கு முன்பு, 2019ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட 35.8 மில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் அது இரண்டு மடங்காகும்.
சுமார் 625 அறப்பணி அமைப்புகள் கிவிங்.எஸ்ஜி இணையத் தளம் மூலம் நிதி திரட்டுகின்றன. அது மட்டுமல்லாமல் தேசிய அளவில் நிதி திரட்டும் முன்னணி மின்னிலக்கத் தளமாகவும் அது விளங்கி வருகிறது.
கிருமித்தொற்று காரணமாக மெய்நிகர் வழியாக நன்கொடையளிப்பது அதிகரித்ததால் கடந்த ஆண்டு சாதனை அளவாக நிதி கிடைத்தது என்று என்விபிசி நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
டிசம்பர் 31ஆம் தேதியன்று ஒரு நாள் மட்டும் 3.5 மில்லியன் வெள்ளி அளவுக்கு அதன் மூலம் நிதி திரட்டப்பட்டது.
இதுவும், இதுவரை இல்லாத ஒருநாள் சாதனையாகும்.
சிங்கப்பூரில் இதர சில நன் ெகாடை திரட்டும் மின்னிலக்கத் தளங்களும் இயங்கி வருகின்றன.
அவற்றில் ஒன்றான ரே ஆஃப் ஹோப் கடந்த ஆண்டு 4.4 மில்லியன் வெள்ளியைத் திரட்டியது.
இது, 2020ல் அது திரட்டிய தொகைக்கு ஈடானது.
ஆனால் 2019ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட 408,000 வெள்ளி யுடன் ஒப்பிட்டால் தற்போது திரட்டிய தொகை பத்து மடங்கு அதிகம். அரிய நரம்புத் தசை நோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் குழந்தைக்கு உலகின் விலையுயர்ந்த மருந்தை வாங்குவதற்காக கடந்த ஆண்டு ரே ஆஃப் ஹோப் மூலம் பொதுமக்கள் 3 மில்லியன் வரை நன்கொடையளித்துள்ளனர்.