கூகல் தேடுதல் தளத்தில் வெளிவரும் போலி வங்கி விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனக் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற மோசடிகளுக்குக் கடந்த மாதம் முதல் குறைந்தது 15 பேர் ஆளாகியுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல் துறை தெரிவித்தது. இழந்த தொகை குறைந்தது $495,000 இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆலோசனை பெறுவதற்காக வங்கிகளின் தொடர்பு எண்களை கூகல் தேடுதல் தளம் வழி பாதிக்கப்பட்டவர்கள் பெற முயன்றபோது, மோசடி விளம்பரங்களும் போலி தொடர்பு எண்களும் திரையில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கூகல் தேடுதல் தளம் காண்பிக்கும் முதல் தெரிவுகளில் அந்த போலி தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
அந்த போலி எண்ணில் தொடர்புகொள்ளும்போது, வங்கி அதிகாரி போன்று பாசாங்கு செய்து மோசடிக்காரர் ஒருவர் பேசுவார்.
வங்கியுடன் தொடர்புகொள்வதற்கான காரணத்தை அறிந்த பிறகு, வங்கிக் கணக்கு, கடன்/பற்று அட்டை, அல்லது கடன் தொகை தொடர்பில் பிரச்சினை இருப்பதாக மோசடிக்காரர் கூறுவார். வங்கிக் கணக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைச் சரிகட்டும்வரை, தான் கூறும் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைத் தற்காலிகமாக மாற்றிவிடுமாறு மோசடிக்காரர் கூறுவார்.
சில சம்பவங்களில் வங்கியின் பெயரைத் தாங்கிய குறுந்தகவலும் பாதிக்கப்பட்டவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பயனாளர்களின் விளம்பர அனுபவங்கள் பாதுகாப்புமிக்கதாக இருப்பதை உறுதிசெய்வதில் கூகல் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வங்கிக் கணக்கு எண்ணில் மாற்றம் அல்லது அதிகளவிலான பணம் மாற்றப்பட்டது குறித்து சரிபார்ப்பதற்காக வங்கிகள் பாதிக்கப்பட்டவருடன் தொடர்புகொள்ளும்போதுதான், மோசடிக்குத் தான் ஆளாகியுள்ளதை அவர்கள் உணர்வர். மோசடிப் பரிவர்த்தனைகள் குறித்து உடனே வங்கிக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

