நடைபாதையில் சட்டவிரோதமாகத் தனது தனிநபர் நடமாட்டச் சாதனத்தை (பிஎம்டி) ஜின் இங் டெங் ஓட்டிச் சென்றபோது, அமலாக்க அதிகாரிகளைக் கண்டார். அவர்களிடமிருந்து அந்த 19 வயது பெண் தப்பிக்க எண்ணினார்.
அதிகாரி நிறுத்தச் சொல்லியும் நிற்காமல் சிங்கப்பூரரான ஜின், வேகமாகத் தனது பிஎம்டியை ஓட்டிச் சென்றுவிட்டார்.
ஆனால் பதிவுசெய்யப்படாத அந்தச் சாதனத்தைக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் மீது ஜின் மோதிவிட்டார்.
இருப்பினும், சாதனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து தன்னுடைய காதலரின் வீட்டுக்கு ஜின் ஓட்டிச் சென்றார். அதே நாளில் கைதும் செய்யப்பட்டார்.
மூன்று குற்றச்சாட்டுகளை நேற்று ஜின் ஒப்புக்கொண்டார். பிஎம்டியை அலட்சியமாக ஓட்டி சிறுவனுக்குக் காயம் விளைவித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று காலை 7 மணிக்கு நடந்ததாகக் கூறப்பட்டது.
ஹவ்காங் ஸ்திரீட் 91ல் உள்ள நடைபாதை அருகே இயந்திர பிஎம்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவோரைப் பிடிப்பதற்காக, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அமலாக்க அதிகாரிகள் இருவர் இருந்தனர். அப்போது ஜின் அவ்வழியாக வருவதை அதிகாரிகள் கண்டனர்.
அதிகாரிகள் ஒரு வேனில் ஜின்னைப் பின்தொடர்ந்து சென்றதை அடுத்து, அவர்களில் ஒருவர் ஜின்னை நோக்கிச் சென்று தனது அதிகாரி அட்டையைக் காண்பித்ததுடன் பிஎம்டியை விட்டு இறங்குமாறும் ஜின்னிடம் கூறினார்.
ஆனால், ஜின் நிறுத்தாமல் வேகவேகமாக பிஎம்டியை ஓட்டிச் சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹவ்காங் ஸ்திரீட் 93ல் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுவன் தன் தாயாருடன் நின்றுகொண்டிருந்தபோது காலை 7.10 மணியளவில் ஜின் அவர்களை நோக்கித் தனது பிஎம்டியில் விரைந்து வந்தார்.
சிறுவனின் வலது கையை ஜின் ஓட்டிச் சென்ற பிஎம்டி இடித்தது. வலி தாங்க முடியாமல் சிறுவன் அழத் தொடங்கியதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு சிறுவனால் அவரது வலது கை விரல்களை மடக்க முடியவில்லை.
சிறுவனுக்கு வலது தோளிலும் காயம் இருந்ததாகக் கூறப்பட்டது. மார்ச் மாதம் ஜின்னுக்குத் தண்டனை விதிக்கப்படும்.

