பெட்ரோல் விலை மீண்டும் கூடியது
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பெரும்பாலான பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை இரண்டிலிருந்து ஏழு காசு வரை அதிகரித்துள்ளன. கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் எண்ணெய் விலை அதிகரித்துவருவதால் உலக நாடுகள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் விலை கூட்டப்பட்டுள்ளது.
எனினும், ஷெல் நிறுவனம், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தனது அனைத்து எரிபொருள் வகைகளுக்கும் நேற்று விலையை ஒரு காசு குறைத்தது. சீனாவின் சினொபெக் நிறுவனம், விலையை ஏழு காசு அதிகரித்தது. சினொபெக் பல காலமாக விலையை ஏற்றாமல் இருந்தது.
டிசம்பரில் 817,000 பயணிகள்
சாங்கி விமான நிலையத்தில் சென்ற மாதம் 817,000 பயணிகள் வந்து சென்றிருக்கின்றனர். சென்ற ஆண்டு முழுவதும் மொத்தமாக சுமார் மூன்று மில்லியன் பயணிகள் வந்து சென்றனர். சென்ற ஆண்டின் மொத்த பயணிகள் எண்ணிக்கையில் டிசம்பர் மாதம் பதிவானது கால் பங்கிற்கும் அதிகம் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
கடந்த நவம்பர் மாதம் பதிவானதில் சென்ற மாதம் வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகம். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொள்ளைநோய்ப் பரவல் மோசமடைந்தது. அதற்குப் பிறகு சென்ற மாதம்தான் ஆக அதிகமான பயணிகள் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர்.
எனினும், இயல்புநிலையைக் காட்டிலும் சாங்கி விமான நிலையத்தின் நிலவரம் இன்னமும் மோசமாகவே உள்ளது. கொள்ளைநோய்ப் பரவல் தொடர்ந்து பயணத் துறையை முடக்கிப்போடுவது இதற்குக் காரணம். சென்ற ஆண்டு பதிவான பயணிகளின் எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டு பதிவானதில் 4.5 விழுக்காடு மட்டுமே.
சிங்கப்பூரர்கள் விரும்பும் பற்றுச்சீட்டு
'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' சுற்றுப்பயண பற்றுசீட்டுகளைப் பெற்ற சிங்கப்பூரர்களில் பாதிக்கும் அதிகமானோர் அவற்றை ஒரு முறையாவது பயன்படுத்தியிருக்கின்றனர். இத்திட்டம் சென்ற மாதம் நிறைவடைந்தது. இதன்படி சுமார் 1.9 மில்லியன் மக்கள் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இவற்றின் மூலம் 2.6 மில்லியன் பரிவர்த்தனைகள் பதிவானதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.
மொத்தமாக சுமார் 300 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' பரிவர்த்தனைகள் பதிவாயின. இதில் இடம்பெற்ற பற்றுச்சீட்டுகளின் மதிப்பு கிட்டத்தட்ட 180 மில்லியன் வெள்ளி. சொந்தமாகக் கட்டணம் செலுத்தவேண்டிய இதர 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' பரிவர்த்தனைகளின் மதிப்பு ஏறக்குறைய 120 மில்லியன் வெள்ளி.

