தீவு முழுவதும் நடந்த அதிரடிச் சோதனையில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 ஆண்கள் 13 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த நவம்பர் முதல் இம்மாதம் 4ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
2021 நவம்பர் 20ஆம் தேதி பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் உள்ள உணவங்காடி நிலையத்தில் நடந்த சோதனையில் சட்டவிரோத சூதாட் டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26 முதல் 72 வயது வரையிலான எட்டுப் பேரை பிடோக் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 580 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
டிசம்பர் 18ஆம் தேதி மற்றொரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. லோரோங் 15 கேலாங்கில் அந்தச் சோதனை நடைபெற்றது.
அப்போது சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 47 முதல் 81 வயது வரை நான்கு ஆண்கள், ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 47 வயது நபர் ஒருவர், சூதாட்டத்தை நடத்திய தாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
டிசம்பர் 24ஆம் தேதி லோரோங் 16 கேலாங்கில் 46 முதல் 70 வயது நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் கைதாயினர். இச்சோதனையில் 1,885 வெள்ளி ரொக்கமும் சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கைப்பற்றப்பட்டன.
ஜாலான் பினாங்கில் உள்ள கடை வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி மற்றொரு சோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் 24 முதல் 65 வரை ஏழு ஆண்களும் ஐந்து பெண்களும் சிக்கினர். அவர்களில் 37 வயது நபர் ஒருவர், சூதாட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்து மாற்றியமைக்கப்பட்ட 13 கணினிகளும் 3,300 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜனவரி 4ஆம் தேதி அன்று சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வெட்ரன் ரோடு கடை வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டு சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட தாக நம்பப்படும் 22 முதல் 59 வயது வரையிலான ஏழு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 94,000 வெள்ளிக்கு மேல் ரொக்கமும் சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அவர்களில் 22 வயது ஆணும் 28 வயது பெண்ணும் சூதாட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத சூதாட்டத்தை நடத்தும் இடத்தை நிர்வகிப்பவர்களுக்கு $5,000 முதல் $50,000 வரை அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு $5,000 வரை அபராதமும் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

