சிங்கப்பூரில் வங்கிகளையும் வாடிக்கையாளர்களையும் பாதித்துள்ள குறுஞ்செய்தி மோசடிகள் காரணமாக மின்னிலக்க வங்கிப் பரிவர்த்தனைகளில் பொதுமக்கள் கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கை கொஞ்சம் பாதிக்கப்படலாம்.
ஆனால் மின்னிலக்க வங்கி முறையில் இடம்பெறக்கூடிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக வாடிக்கையாளர்களிடம் மீண்டும் நம்பிக்கை வலுவடையும் என்று நிதித்துறையும் இணையப் பாதுகாப்பு நிறுவனங்களும் நம்புகின்றன.
வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து அண்மையில் பல மோசடி சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. அதைக் கருத்தில்கொண்டு அடுத்த இரண்டு வாரங்களில் இங்குள்ள வங்கிகள் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த இருக்கின்றன.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
அத்தகைய ஏற்பாடுகள், மின்னிலக்க வங்கிப் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இருந்தாலும்கூட மோசடிகளைத் தவிர்த்துக்கொண்டு விழிப்புடன் இருந்து வரவேண்டியதன் தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் போதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
நம்பிக்கை பலப்படும்
ஆணையமும் வங்கிகள் சங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் வங்கிகளுக்கும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் நம்பிக்கையைப் பலப்படுத்தும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் லாரன்ஸ் லோ கருத்துரைத்தார்.
அந்தப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் பெரிதும் தேவைப்படும் நம்பிக்கையைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் என்று 'வெரிடாஸ் டெக்னாலஜிஸ்' என்று நிறுவனத்தின் சிங்கப்பூருக்கான இயக்குநர் ஜஸ்டின் லோ தெரிவித்தார்.
"சிங்கப்பூர் அறிவார்ந்த நாடாகத் திகழ முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு நீண்டகால நோக்கில் மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் நடப்புக்கு வரவேண்டும்.
''வாடிக்கையாளர்கள் பயம் காரணமாக மின்னிலக்க பரிவர்த்தனைகளில் இருந்து விலகிவிடுவதற்கு முன்பாகவே இத்தகைய நடவடிக்கைகளை அமல்படுத்தி மின்னிலக்க வங்கி முறையில் அவர்களிடம் நம்பிக்கை வலுவாக ஏற்பட வழிவகுக்க வேண்டும்," என்றும் திரு லோ கூறினார்.
அதேபோல நிதித்துறைக்கு மின்னிலக்கமயம் உயிர்நாடியானது என்று கூறிய 'ஏடிடிஎக்ஸ்' நிறுவனத்தின் தலைமை வர்த்தகத் துறை அதிகாரி திருவாட்டி ஊய் யீ சூ, அதேவேளையில், மின்னிலக்கமயம் காரணமாக எளிதல் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துகளும் உண்டு என்று எச்சரித்தார்.
பாதுகாப்பு வலுவாகும்
அண்மைய மோசடிகள் காரணமாக வாடிக்கையாளர்கள் நம்பிக்கை பாதிக்கப்பட்டு இருந்தாலும் மின்னிலக்க வங்கித் துறை மீண்டு மேலும் வலுவான பாதுகாப்பான ஒன்றாகத் திகழும் என்று திருவாட்டி சூ நம்பிக்கை தெரிவித்தார்.
நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநரான ரவி மேனன், கடந்த புதன்கிழமை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த ஆணையமும் இதர அரசாங்க அமைப்புகளும் நிதித் தொழில்துறை உள்ளிட்ட பல அமைப்புகளோடும் நிறுவனங்களோடும் சேர்ந்து செயல்பட்டு மோசடிகளுக்கு எதிரான ஒட்டுமொத்த ஆற்றலைப் பலப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் திரு மேனன் தெரிவித்து இருந்தார்.
மின்னிலக்கப் பரிவர்த்தனைகளில் எவை எவற்றைச் செய்யவேண்டும் எவை எவற்றைச் செய்யக்கூடாது என்பதை வாடிக்கையாளர்கள் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்ள உதவ பொது போதனை தொடர வேண்டியது அவசியம் என்று திருவாட்டி சூ குறிப்பிட்டார்.
முறையான இணையப் பாதுகாப்பு பற்றி வாடிக்கையாளர்களுக்குப் போதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சிஸ்கோ அமைப்பின் ஆசியானுக்கான இணையப் பாதுகாப்பு விற்பனைத் துறை இயக்குநர் ஜுவான் ஹுவாட் கூ வலியுறுத்திக் கூறினார்.
"இணையத்தைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் எப்போதும் விழிப்புடன் இருந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட தகவல்களை முன்பின் தெரியாதவர்கள் யாருக்கும் எப்போதும் கொடுக்கக்கூடாது.
"கைபேசி முதலான சாதனங்களை ஆகப் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும். சந்தேகமான இணைப்புகளில் தொடர்புகொள்ளக்கூடாது," என்று அவர் தெரிவித்தார்.

