'எஸ்ஜி துப்புரவு தினத்தின்' ஒரு பகுதியாக இங்குள்ள நான்கு விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் இடத்தை தாங்களே சுத்தப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.
பொது சுகாதார மன்றம் நேற்று இது பற்றி அறிவித்தது.
'டிஏஎஸ்எல்' என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்த மன்றம் இந்த ஆண்டின் முதலாவது எஸ்ஜி துப்புரவு தினத்தை நேற்று தொடங்கியது. அப்போது இந்த அறிவிப்பு இடம்பெற்றது.
காக்கி புக்ெகட்டில் உள்ள ஹோம்ஸ்டே விடுதி, பொங்கோலில் இருக்கும் எஸ்11 விடுதி, அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் இருக்கும் கோச்ரன் விடுதி 2, சிலேத்தார் நார்த்தில் உள்ள டீ அப் விடுதி ஆகிய அந்த நான்கு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் அதிகாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துப்புரவுப் பணிகள் இடம்பெறாது.
இதுவரை பொது பூங்காக்களிலும் தோட்டங்களிலும் பூங்கா இணைப்புப் பாதைகளிலும் திறந்த இடங்களிலும் குடியிருப்புப் பேட்டையின் தரைத் தளங்களிலும் மட்டும் எஸ்ஜி துப்புரவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் வசிப்போர் தங்கள் துப்புரவிற்குத் தாங்களே பொறுப்பேற்க ஊக்குவிப்பது இந்த பங்காளித்துவ திட்டத்தின் நோக்கம் என்று மன்றம் தெரிவித்தது. சிங்கப்பூரில் பொதுவான இடங்களின் ஒட்டுமொத்த தூய்மையையும் துப்புரவுத் தரத்தையும் உறுதிப்படுத்துவதில் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது என்று மன்றம் வலியுறுத்தி கூறியது.
எஸ்ஜி துப்புரவு தினத்தில் 17 நகர மன்றங்களும் கலந்துகொள்கின்றன.
ஜூரோங் கிளமெண்டி நகர மன்றத் திட்டங்களின் ஒரு பகுதியாக குடியிருப்பாளர்கள் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1ல் உள்ள புளோக் 425 பகுதியில் குப்பைக்கூளங்களை அகற்றி அவற்றைச் சுத்தப்படுத்தினர்.
பொது சுகாதார மன்றத்தின் தலைவர் எட்வர்ட் டி சில்வா உள்ளிட்ட பிரமுகர்களும் ஜூரோங் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த நகர மன்றத் தலைவருமான ஸி யாவ் சியானும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
எஸ்ஜி துப்புரவு தினத்தில் மேலும் பல நிறுவனங்களும் சமூகத்தினரும் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் இந்த மன்றம் அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளது.
எஸ்ஜி துப்புரவு தினம் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.publichygiene council.sg என்ற இந்த மன்றத்தின் இணையத்தளம் செல்லலாம்.

