முதலாளிகளைவிட நடுநிலை நிர்வாகிகளுக்கே அதிக பணிச்சுமை: ஆய்வு

முதலாளிகளைவிட நடுநிலை நிர்வாகிகளுக்கே அதிக பணிச்சுமை: ஆய்வு

1 mins read
97a2645c-bce2-4ab2-b09d-7b538a0a8841
நடுநிலை நிர்வாகிகள்தான் அதிக பணிச்சுமையை எதிர்நோக்குகின்றனர். படம்: யோமெய்ஷூ -

புதிய, இளம் ஊழியர்களையும் கண்காணித்துக்கொண்டு தங்களின் மேலதிகாரிகளுக்கும் இணங்கி நடந்துகொள்ளும் நடுநிலை நிர்வாகிகளுக்குத்தான் அதிக பணிச்சுமை இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற நடுநிலை நிர்வாகிகளில் 61% தினந்தோறும் கூடுதல் நேரத்திற்கு வேலை செய்வதாகத் தெரிவித்தனர்.

அவர்களுக்குமேல் இருக்கும் நிறுவன இயக்குநர்கள் போன்றோரில் 49% மட்டுமே கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர். புதிய, இளம் ஊழியர்களில் 54% கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதர ஊழியர்களைச் சமாளிப்பது, வர்த்தகச் செயல்பாடுகளைக் கவனிப்பது ஆகிய இரண்டு பணிகளிலும் ஈடுபடும் நடுநிலை நிர்வாகிகள்தான் ஆக அதிக பணிச்சுமையை எதிர்நோக்குகின்றனர் என்று சிங்கப்பூர் மனிதவளக் கழகத்தின் தலைவர் லோ பெக் கெம் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் ஊழியர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் நலனைக் கவனித்துக்கொள்வதில் நடுநிலை நிர்வாகிகள் கூடுதல் நேரம் செலவிடுவதாக 'மேன்பவர்குரூப் சிங்கப்பூர்' நிறுவனத்தின் சிங்கப்பூருக்கான நிர்வாகி லிண்டா டியோ சொன்னார்.