வீட்டுக்கு வழக்கமாக வரும் கடிதம் அல்லது பொட்டலம் மூலம் தொற்று ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவு. பொதுமக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
பெய்ஜிங்கில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஓமிக்ரான் சம்பவத்தின்போது கனடாவிலிருந்து வந்த பொட்டலம் மூலம் வந்திருக்கலாம் என்று சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
வெளிநாட்டிலிருந்து வரும் தபால்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்றும் சீனா மேலும் கூறியிருந்நதது.
வெளிநாட்டிலிருந்து பொருள்கள் வாங்குவதையும் கடிதம் பெறுவதையும் குறைத்துக் கொள்ளுமாறும் கடிதத்தைப் பிரிக்கும்போது கையுறைகளை அணிந்துகொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இறக்குமதி செய்யப்படும் உறைய வைக்கப்படாத பொருள்கள் மூலம் கொவிட்-19 கிருமி நாட்டுக்குள் நுழைகிறது என்பதற்கான போதுமான ஆதாரங்களை சீன அதிகாரிகள் வெளியிடவில்லை என்று புளூம்பெர்க் சனிக்கிழமை அன்று குறிப்பிட்டிருந்தது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய் நிபுணரான பேராசிரியர் லாவ்ரென்ட் ரெனியா, கொவிட்-19 பரவும் முக்கிய வழி நீர்த் துளிகள் என்று குறிப்பிட்டார்.
பொருள்கள் மூலம் கிருமி பரவும் வாய்ப்பு இருந்தாலும் அது மிகவும் குறைவு என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சா சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் நடாஷா ஹோவார்ட், கொள்ளைநோய் பரவத் தொடங்கியபோது பொருட்கள் மூலம் பரவலாம் என்ற கவலை இருந்தது என்றார்.
"ஆரம்ப காலமாக இருந்ததால் கிருமி பற்றி அதிகம் ெதரியவில்லை. கிருமிப்பரவலுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. அந்தச் சூழ்நிலையில் ஒரு பொருளில் கிருமி நீண்டகாலம் உயிர்வாழ முடியும் என்பதை ஆரம்பச் சோதனைகள் காட்டியதால் பொருள்கள் மூலம் கிருமி பரவலாம் என்று நிபுணர்கள் ஊகித்தனர்.
"இருந்தாலும் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த சோதனைகளில் சுவாசிப்பது மூலம் கிருமி பரவுவதைவிட பொருள்களை தொடுவதால் தொற்று ஏற்படுவதும் மிகவும் குறைவு என்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக தொற்றுநோய்ப் பிரிவின் மூத்த ஆலோசகரான பேராசிரியர் டேல் ஃபிஷர், கடிதங்கள் வழியாக கிருமி தொற்றுவதற்கு ஏறக்குறைய வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் மிக அரிதான சந்தர்ப்பத்தில் தொற்று ஏற்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

