அதிக வேகத்தில் பரவும் புதிய உருமாறிய ஓமிக்ரான் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் பொது மருத்துவர்கள் அதிக பொறுப்புகளைச் சுமக்கின்றனர்.
ஏறக்குறைய 1,800 தனியார் பொது மருந்தகங்கள் சிங்கப்பூரில் செயல்படுகின்றன.
அந்தக் கிருமி மேலும் பரவும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் எத்தகைய கொவிட்-19 நோயாளிகளுக்கு அதிக கவனிப்புத் தேவை என்பதையும் வீட்டில் குணமடையக் கூடியவர்களை தீர்மானிப்பதிலும் பொது மருத்துவர்கள் மிகப்பெரிய பங்கை ஆற்றுகின்றனர் என்று இவ்வாண்டு தொடக்கத்தில் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
ஹெல்த்வே மெடிகல் போன்ற சில மருந்தகங்கள் ஏற்கெனவே அதிக நோயாளிகளைக் கையாண்டு வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதன் 70 மருந்தகங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு தொற்றுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஹெல்த்வே மெடிகல் கார்ப்பரேஷனின் ஆரம்பச் சுகாதாரப் பிரிவின் துணைத் தலைவரான டாக்டர் நெல்சன் வீ இதனை தெரிவித்தார்.
"நல்ல வேளையாக எங்களுக்கு வந்த நோயாளிகள் லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்். இதனால் வீட்டிலேயே அவர்கள் பாதுகாப்பாகக் குணமடையும் சாத்தியம் இருந்தது," என்று அவர் கூறினார்.
பொதுமக்களில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளது இதற்கு ஒரு காரணம் என்றார் அவர்.
சிங்கப்பூரில் தடுப்பூசிக்குத் தகுதி பெற்றவர்களில் 91 விழுக்காட்டினர் முழுமைாகத் தடுப்பூசி போட்டுள்ளனர். 54 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.
பார்க்வே ஷென்டன் நிறுவனத்தில் அதன் 31 பொது மருந்தகங்களின் ஒவ்வொரு கிளைக்கும் வாரத்திற்கு ஐந்து முதல் ஏழு கொவிட்-19 நோயாளிகள் வந்துள்ளனர். இது, 2021ஆம் ஆண்டின் கடைசி காலாண்டுடன் ஒப்பிடுகையில் சற்றுக்குறைவு.
விடிஎல் பயணத்தின் விதிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று பார்க்வே குழுமத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எட்வின் சிங் கூறியுள்ளார்.
ஓமிக்ரான் பரவலால் கடந்த டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை விடிஎல் ஆகாய, தரைவழிப் பயணங்களுக்கான டிக்கெட் விற்பனையை சிங்கப்பூர் நிறுத்தி வைத்திருந்தது. இருந்தாலும் நோயாளிகளின் பரிசோதனை முறை, நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று டாக்டர் சிங் மேலும் தெரிவித்தார்.

