பொருளியல் நிபுணர்களின்
முன்னுரைப்புகளையும் தாண்டி
சிங்கப்பூர் பயனீட்டாளர் விலைக் குறியீடு கடந்த டிசம்பர் மாதம் புதிய உச்சத்தை எட்டியது. இது அரசாங்கத்தை இவ்வாண்டுக்கான பணவீக்க முன்னுரைப்புகளை
மறுஆய்வு செய்யுமாறு தூண்டி உள்ளது.
தங்குமிடம், தனியார் போக்குவரத்துச் செலவு ஆகியவை சேர்க்கப்படாத மூலாதாரப் பணவீக்கம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 2.1 விழுக்காடு அதிகரித்தது.
2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு மூலாதாரப் பணவீக்க விகிதம் கடந்த டிசம்பர் மாதம் ஆக அதிக அளவில் ஏற்றம்
கண்டுள்ளது.
விமானக் கட்டணங்கள் அதிக அளவில் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகின்றன.
மூலாதாரப் பணவீக்கம் 1.7 விழுக்காடு மட்டும் உயரும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் ஒட்டு மொத்த பணவீக்கம் 3.8 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக அதிகரித்தது.
2013ஆம் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த பணவீக்கம் அதிக அளவில் அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை. ஒட்டுமொத்த பணவீக்கம் 3.75 விழுக்காடு உயரும் எனப் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர்.
மூலாதாரப் பணவீக்கம் அதிகரிப்பு, வீட்டு வாடகை அதிகரிப்பு ஆகியவற்றால் முன்னுரைக்கப்பட்டதைவிட ஒட்டுமொத்த பணவீக்கம் ஏற்றம் கண்டது.
பயனீட்டாளர் விலைக்குறியீட்டில், விமானக் கட்டணங்களில் ஆச்சரியப்படும்படியான விலை உயர்வு தென்பட்டதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் தெரிவித்தன.
தடுப்பூசி போட்டவர்களுக்கான பயணப் பாதைகள் (விடிஎல்) படிப்
படியாக அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில், பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் விமானக் கட்டணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் மாத விலைக்குறியீடு, அதிகரித்துள்ள அடிப்படை விமான கட்டணங்களையும் கட்டாய கொவிட்-19 பரிசோதனைகளின் கூடுதல் செலவுகளையும் பிரதி
பலிக்கிறது என்று அவை தெரிவித்தன.
விமானக் கட்டணங்களைத் தவிர்த்து, போக்குவரத்துச் சேவைக்கான கட்டணங்கள், துணைப் பாட வகுப்புகளுக்கான கட்டணங்கள், இதர கட்டணங்கள் ஆகியவை வேகமாக உயர்ந்தன.
இதன் விளைவாக சேவைக் கட்டணங்கள் 2.6 விழுக்காடு அதிகரித்தன.
குறுகிய கால அடிப்படையில், பணவீக்கம் தொடர்பில் நிலையற்றநிலை தொடர்வதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்தன.
விமானக் கட்டணங்கள், உணவு, எண்ணெய் போன்ற பொருட்களின் விலை இவற்றில் அடங்கும்.
விமானக் கட்டணங்களின் அதிகரிப்பையும் சேர்த்து முன்னுரைக்கப்பட்டதைவிட பணவீக்கம் ஏற்றம் கண்டிருப்பதால் இவ்வாண்டுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம், மூலாதாரப் பணவீக்கம் ஆகியவற்றை மறுஆய்வு செய்வதாக ஆணையமும் அமைச்சும் கூறின.
இருப்பினும், ஆணையமும் அமைச்சும் முன்னுரைத்தபடி கடந்த ஆண்டின் முழு ஆண்டுக்கான மூலாதார, ஒட்டுமொத்த பண
வீக்கம் முறையே 0.9 விழுக்காடாகவும் 2.3 விழுக்காடாகவும் பதிவாகின. கடந்த ஆண்டு சிங்கப்பூர் வலுவான பொருளியல் மீட்சியைக் கண்டது. இதையடுத்து, அண்மைய மாதங்களில் பணவீக்கம் ஆச்சரியப்படும்படி உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு மெதுவாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளியல் வளர்ச்சி மூன்று விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காடாகப் பதிவாகும் என முன்னரைக்கப்பட்டுள்ளது.
வேலையின்மை குறைந்து வருவதாலும் வருமானம் அதிகரித்திருப்பதாலும் பொருள், சேவைகள் ஆகியவற்றுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சம்பளம் அதிகரித்துள்ளது.

